சென்னை: மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகிய இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் போர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியின் போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.
மாநில அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியினை ஒருங்கிணைக்கும் மற்றும் இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.


