Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எச்சரிக்கை

கர்நாடக மாநில முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பிறகு அவருடன் 14 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இன்னும் அமைச்சரவையில் 20 இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அமைச்சரவையில் இடம் பிடிக்க முன்னாள் அமைச்சர்கள், மூத்த எம்எல்ஏக்கள் லாபி நடத்தி வருகின்றனர். இது கட்சி மேலிடத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த டெல்லி மேலிடம், அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்காக எம்எல்ஏக்கள் லாபி நடத்துவதை முதல்வர் டி.கே.சிவகுமார் கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் லாபி செய்யும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையில் பெங்களூரு வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி வரும் டி.கே.சிவகுமார் ஒன்றரை லட்சம் கோடியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். ஓரிரு மாதங்களில் பெங்களூருவில் உள்ள 5 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது.

எப்படியாவது 5 மாநகராட்சியிலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு அவர் செயல்பட்டு வருகிறார். இதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். உட்கட்சி பூசலில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சிக்கே துரோகம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் எச்சரித்துள்ளார். இந்நிலையில், பிடதி டவுன்ஷிப் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி குரல் கொடுத்து வருகிறார்.

குமாரசாமி ஆட்சி காலத்தில் தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் அதை நடைமுறைபடுத்தி வருகிறது என்று முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையில், கர்நாடக கலால்துறை ஒருங்கிணைந்த நெட்வொர்க் அமைத்து ஊழல்களின் மையமாக செயல்பட்டு வந்துள்ளது என்று சமீபத்தில் அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனால் கோபமடைந்த முதல்வர் டி.கே.சிவகுமார், கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த யார் முயற்சித்தாலும் அமைதியாக இருக்கமாட்டேன்.

கலால்துறையில் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் வேறு துறைக்கு மாற்றிவிடுவேன். தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் சட்டதிருத்தம் செய்து கூண்டோடு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கைவிடுத்தார். போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பெங்களூருவில் நடந்த விழாவில் பேசிய முதல்வர் டி.கே.சிவகுமார், ‘கர்நாடக மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்படுகிறது.

இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்கால தூண்கள். இவர்கள் போதை வழியே சென்று தனது வாழ்க்கை மட்டுமின்றி குடும்பத்தையும் சீரழிப்பதை ஏற்க முடியாது. கர்நாடகாவில் பான்மசாலா, குட்கா பொருட்களில் துளி அளவு போதைப்பொருள் கலப்பது உறுதி செய்யப்பட்டால் அரசு உடனே விற்பனைக்கு தடை விதிக்கும் என்று எச்சரிக்கிறேன். இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் ரூ.100 கோடி வருவாயை இழந்தாலும் பரவாயில்லை’ என்றார்.

இதை கெட்டியாக பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சியான பாஜ, இலவச திட்டங்கள் நிறைவேற்ற வருவாயை பெருக்க காங்கிரஸ் அரசு இளைஞர்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறது. ேபாதைப்பொருள் விற்பனை மாபியாக்களுக்கு அரசே துணைபோவதை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.