Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மீண்டும் போர் பதற்றம்

மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் மேகம் சூழ தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் பெரியண்ணன் மனோபாவத்தால், கடந்த சில மாதங்களாகவே உலக நாடுகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. அதிலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, தன்னை முன்னிலைப்படுத்தியே உலக அரங்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் விளைவாக மேற்காசிய நாடுகளில் போரும், அதன் தொடர்ச்சியாக உலகெங்கிலும் விலைவாசி உயர்வும் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றன.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28ம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் எரிபொருள் பிரச்னையை எல்லா நாடுகளுமே எதிர்கொண்டன. இந்நிலையில் கடந்த ஜூன் 17ம் தேதி சுவிட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்திலேயே கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும் என ஈரான் தெரிவித்தது.

அதற்கு மாறாக ஓமன் கடற்கரையை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றால் தாக்குதல் நடத்துவோம் என ஈரானும் போர் ஒப்பந்தம் போடும்போதே மல்லுக்கு நின்றது. இந்நிலையில் தற்போது சவுதி, சைபீரியா, மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி கடந்து செல்ல, ஈரான் ராணுவத்தினர் அவற்றின் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரானும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்கியதால் இரு நாடுகளும் மீண்டும் போரை தொடர்ந்துள்ளன.

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதால், போர் ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டு, இரு நாடுகளும் போருக்கு புஜங்களை தட்டிக் கொண்டு நிற்கின்றன. மேற்காசிய பகுதியில் தன்னுடைய தலையீட்டை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் வரை உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்துக்கு மிக முக்கிய பாதையாக விளங்கும் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்படுகிறது என ஈரான் நேற்று அறிவித்து விட்டது.

கடந்த 6 மாதங்கள் நடந்த போரின் போதே ஹார்மூஸ் ஜலசந்தி தனது துருப்பு சீட்டு என்பதை உணர்ந்து கொண்ட ஈரான், அணு ஆயுதங்களை விட, அதை மூடினாலே அமெரிக்காவும், அதன் நட்புறவு நாடுகளும் தனது வழிக்கு வரும் என்பதை உறுதியாக நம்புகிறது. எதிலுமே தடாலடியாக செயல்படும் அமெரிக்க அதிபர் டிரம்பும், தனக்கு ஓட்டு போட்ட மக்களை மட்டுமின்றி, உலக மக்களையும் ஒருவழி செய்துவிட வேண்டும் என்கிற துடிப்பில் மீண்டும் போர் முரசை கொட்ட ஆரம்பித்து விட்டார்.

இரவில் அமைதி ஒப்பந்தத்திற்கு வழி இருக்கிறது என்பவர் விடிந்ததும் போர்தான் தீர்வு என்பார். இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. அதில் 40 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. மீண்டும் தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் சரக்கு கப்பல்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வதால் உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து, கடுமையான பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எதையும் எதிர்கொள்ள மக்கள்தான் தயாராக இருக்க வேண்டும் போல.