Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

போரல்ல அக்கப்போர்..

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி போரை துவங்கியது. போர் தீவிரமானதை தொடர்ந்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. 40 நாட்களாக தொடர்ந்த போரை கைவிட வேண்டும் என்று அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்தது.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், கச்சா எண்ணெய் வரத்து பாதித்ததால் மக்கள் பெட்ரோல், காஸ் சிலிண்டர் கிடைக்காமல் தட்டுப்பாட்டுக்கும் ஆளாகினர். எனவே, ஈரான் தனது ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே, 10 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த போர்நிறுத்த காலகட்டத்தில் ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து எண்ணெய் கப்பல்களும் அனுமதிக்கப்படும் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது குறித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ‘‘லெபனான் நாட்டில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக, ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிக கப்பல்களும் முழுமையாக செல்ல அனுமதிக்கப்படும்,’’ என்று தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்பும், ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார்.

இந்த தகவலால் அனைத்து நாடுகளும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டது. போரின் தாக்கத்தால் சிரமத்தில் தவித்த மக்களுக்கு, இந்த ஒப்பந்தம் சற்று ஆறுதலாக அமையும் என்பது இதற்கான முதல்காரணம். அதே நேரத்தில், இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தால் இந்தியா போன்ற நாடுகளுக்கு தடைபட்ட கச்சா எண்ணெய் வரத்து சீராகும். கச்சா எண்ணெய் விலையும் 10 சதவீதம் வரை குறையும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது.

இந்த நிலையில், ‘‘ஹார்முஸ் நீரிணை திறப்பு என்பதை வரவேற்றாலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெறும் என்று டிரம்ப் அறிவித்தார். இதனால் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்த ஈரான், ‘‘அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும் வரையில், ஹார்முஸ் நீரிணையின் வழியாகச் செல்லும் வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து முடக்கப்படும்’’ என்று அறிவித்துள்ளது.

இதன் எதிரொலியாக, ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியில் இருந்து ஹார்முஸ் நீரிணையை நோக்கி வந்து கொண்டிருந்த இந்திய கப்பலான ‘பாக்யலட்சுமி’ அடையாளம் காணப்பட்டு வழிமறிக்கப்பட்டு, திருப்பி விடப்பட்டுள்ளது. இதேபோல், இந்திய கச்சா எண்ணெய் கப்பலான தேஷ்சுரஷாவும், ஈரானிய படைகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த வகையில், இந்திய கப்பல்கள் உட்பட சுமார் 20 கப்பல்கள் ஓமன் நாட்டை நோக்கிச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் போர் நடக்கும் நாடுகள் சம்மந்தப்பட்ட மக்கள் மட்டுமன்றி, அதன் எதிரொலியால் சிரமங்களை சந்திக்கும் மக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மொத்தத்தில் உத்திரவாதங்கள் அனைத்தும் நொடியில் கரைந்து சிதைந்து, போர்ச்சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்புடைய நாடுகளுக்கு வேண்டுமானால் இது போராக இருக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்கும் ‘இது போரல்ல, அக்கப்போர்’ என்பது நடுநிலையாளர்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.