Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரட்டிப்புப் பலன்களை அள்ளிக் கொடுக்கும் இரவு நேர நடைப்பயிற்சி!

எளிமையான உடற்பயிற்சியை விரும்புவோர்களின் தேர்வாக அமைவது நடைப்பயிற்சி. பெரும்பாலும் காலை வேளையில் தான் பலரும் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். அதே போல் இரவு தூங்க செல்வதற்கு முன்பு அரைமணி நேரம் நடைப் பயிற்சி செய்து வரலாம். அந்த பயிற்சியும் ஏராளமான நன்மைகளை பெற்று தரும்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும்

இரவில் நடைப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் முக்கியமான நன்மை ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதுதான். இரவில் நடைப் பயிற்சி மற்றும் மிதமான உடற்பயிற்சி செய்வது தூக்கத்திற்கு உதவும் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதி செய்துள்ளன. இரவுநேர நடைப் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஓய்வெடுக்கவும், ஆழமான தூக்கத்தைப் பெறவும் உதவும்.

உடல் எடை குறைக்கும்

இரவில் அரை மணி நேரம் நடப்பது வளர் திசைமாற்ற விகிதத்தை அதிகரிப்பதோடு, தூக்கத்தின் போதும் கலோரிகளை எரிக்கும் அளவை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவிபுரியும். இரவு நேரத்தில் அடிக்கடி நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை நிர்வகிக்கவும், உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும். இரவு நேர ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் உதவும்.

மன ஆரோக்கியத்திற்கு உதவிடும்

மாலைநேர அல்லது இரவு நேர நடைப்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் நல்லது. மனச் சோர்வு மற்றும் பதற்றத்தை குறைக்க நடைப்பயிற்சி உதவும். இரவில் நடப்பது எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட உதவும். அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு பார்க்க மனதுக்கும் நேரம் கொடுக்கும். மனதை தெளிவுடன் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். அன்றைய தினத்தில் நடந்த கசப்பான பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் அவை குறித்து தெளிவான முடிவுகளை அடுத்து வரும் நாட்களில் எடுக்கவும் வழி வகுக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

இரவு உணவு உண்ட பிறகு சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும். அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்ட ஒரு ஆய்வில், சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் உலாவருவது செரிமானத்திற்கு உதவும். அசிடிட்டி, அஜீரணம் போன்ற அசவுகரியங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்’. இரவுநேர நடை நமது செரிமான ஆய்வுகளின் செயல்பாடுகளை மென்மையாக்குகிறது. குமட்டல், வயிறு உப்புசம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்காமல் தூங்குவதற்கு உதவுகிறது என குறிப்பிட்டுள்ளது.

நடை பயிற்சியின்போது பின்பற்ற வேண்டியவை

சிறிது நேரம் மெதுவாகவோ, பின்பு வேகமாகவோ நடக்கக்கூடாது. சீரான வேகத்தை பின்பற்ற வேண்டும். குறைந்த பட்சம் உங்கள் இதயத்துடிப்பை மெதுவாக உயர்த்தும் அளவுக்காவது விறுவிறுப்பாக நடக்க வேண்டும்.பூங்கா அல்லது அமைதியான சுற்றுப்புறம் கொண்ட இடத்தை நடைப் பயிற்சிக்கு தேர்வு செய்யவும். இது ரிலாக்ஸாக நடப்பதற்கு, நடைப்பயணத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.நடைப் பயணத்திற்கு பிறகு தசைகளின் இயக்கத்தை சீராக்கவும், நன்றாக ஓய்வெடுக்கவும் இது உதவும். முடிந்தால் உங்கள் துணை, நண்பர்கள் , சகோதர/சகோதரிகள் உடன்கூட நடக்க இன்னும் மனம் லேசாக உணரும். பெண்களுக்கு இது ஆழ்ந்த தூக்கத்தை கொடுத்து மேலும் அடுத்த நாளுக்கான எனர்ஜியையும் சேமிக்கும்.

- அ.ப. ஜெயபால்