வாலாஜாவில் குறைதீர்வு கூட்டம் பாலாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்
*விவசாயிகள் கோரிக்கை
வாலாஜா : வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு நாள் நடந்தது. தாசில்தார் ஆனந்தன் தலைமை தாங்கினார். டிஎஸ்ஓ சுபலப்ரியா முன்னிலை வகித்தார். மேலும், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததாவது:வாணியன்சத்திரம் கிராமத்தில் உள்ளூர் பஸ்கள் நிற்பதில்லை. அதேபோல், பாகவெளி கிராமத்தில் இருந்து வெளியூர் சென்று மீண்டும் இரவு நேரத்தில் வருவதற்கு பஸ் வசதி இல்லை.
இதனால் பெண்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை முறையாக வழங்க வேண்டும். பிஎல்ஓக்கள் வாக்காளர்களுக்கு விவரமாக எடுத்து சொல்ல வேண்டும். முதல்வரின் தாயுமானவர் திட்டம் மூலம் மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து ரேஷன் கடைக்காரர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.
சீக்கராஜபுரம் ஏரியில் தொழிற்சாலைகளின் ரசாயன கலவை, குறிப்பாக குரோமிய கழிவுப் பொருட்கள் கலந்திருக்கிறது. இதனால் அங்கிருந்து வெளியேறும் மாசடைந்த நீரானது கால்வாய் வழியாக பாலாற்றில் கலந்து விடுகிறது. அதனை பயன்படுத்தும் லட்சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
வடகால், தெங்கால் ஆகிய ஏரிகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். ரத்தினகிரி அடுத்த கன்னிகாபும் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்.
அனந்தலை ஏரிக்கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் குடிநீர் ஆதாரம் அழியும் அபாயம் உள்ளது.
ஆதார் அட்டையில் பிறந்த தேதி, விலாசம் ஆகிய திருத்தங்கள் செய்யப்படுவதற்கு பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, கூடுதலாக ஆதார் மையங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.