Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வியாசர்பாடியில் உள்ள மடத்தில் முகம் சிதைத்து வாலிபர் கொலை: கொன்றவர்கள் யார் என விசாரணை

பெரம்பூர்: வியாசர்பாடியில் உள்ள மடம் அருகே முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். எதற்காக இந்த கொலை நடந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வியாசர்பாடி சாமியார் மடம் முதல் சந்து பகுதியில் கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடம் உள்ளது. இங்கு வழிபட பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.மிகவும் பழமையான மடத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை கொடுங்கையூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த செல்வேந்திரன் (39) என்பவர் இன்று காலை மடத்துக்கு வந்து வழிபட்டுவிட்டு பின்னர் மடத்தை சுற்றிவந்துள்ளார். அப்போது மடத்துக்கு பின்புறம் உள்ள புதரில் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக இதுகுறித்து மட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவல்படி, செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி, வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் போலீசார் சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த நபர் யார், எதற்காக மடத்துக்கு வந்தார், அவரை யார் கொலை செய்தார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன் விரோதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் கடத்திவந்து வாலிபரை கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. மடம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.