Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

*ரேண்டம் முறையில் மேசைகள் ஒதுக்கப்படும்

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

திருவண்ணாமலை : வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கு, ரேண்டம் முறையில் மேசைகள் ஒதுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வளாகத்திலும், ஆரணி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் சுமார் 1500 அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 12 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதற்காக, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறைகளிலும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலாவதாக, தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும். அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இறுதியாக, ஒவ்வொரு தொகுதியிலும் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படும் 30 ஒப்புகை ரசீது இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்களுக்கு, வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.

அதில், ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டிஆர்ஓ பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், தாசில்தார் சாப்ஜான் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாவது:மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் உள்ள திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனி அறைகளிலும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்ைக தனித்தனி அறைகளிலும் நடைபெறும்.

ஒவ்வொரு அறையிலும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர் ஆகியோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள். எனவே, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் 4ம் தேதி அதிகாலை 5 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வர வேண்டும். அதைத்தொடர்ந்து, ரேண்டம் முறையில் மேசைகள் ஒதுக்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ரகசியம் மீறமாட்டேன் என உறுதிமொழியை ஏற்க வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள், செல்போன், ஐபேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டுசெல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அலுவலர்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, முகவர்களிடம் நேரடியாக பேச கூடாது. தகவல் பரிமாற்றங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை விபரங்களையும் முறையாக படிவத்தில் பதிவு செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளரிடம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.