Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வாக்காளர்கள் ஆர்வம்

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் வருகிற 21ம் தேதி மாலையுடன் முடிவடைய உள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நாளை (15ம் தேதி) பிரசாரம் செய்கிறார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரைவில் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

10 ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்படும் என பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும். ஆனால் அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் என தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டு வருவது வாக்காளர்கள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக அவர் நீடிக்க முடியுமா? கட்சியில் இரண்டாம் கட்ட நிர்வாகிகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கட்சியில் பெரிய பூகம்பமே வெடிக்கும் என்பதால் எடப்பாடி பழனிசாமி தாறுமாறாக பேசி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவரது பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்து வருகிறார். சாத்தான்குளம் கொலையையே மறைக்க பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. என் மீதும், தங்கை கனிமொழி மீதும் தனிநபர் தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒன்றிய பாஜ கூட்டணியில் இருந்த அதிமுக என்ன சாதனை செய்தது? மும்மொழி கொள்கை, தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என்று பழனிசாமியால் பாஜவை சொல்ல வைக்க முடியுமா என தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில், பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு மற்றும் பிற தரவுகள் மூலம் தெரியவருகிறது. 2025-26ல் மாநிலத்தின் ஜிஎஸ்டிபி 419.74 பில்லியனை எட்டும். கல்வி, சுகாதாரம் மற்றும் தொழிற்துறையில், குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வாகன உற்பத்தியில், இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி மற்றும் தோல் உற்பத்தியில் முதன்மையாக உள்ளது. 2024-25ல் ஏற்றுமதி ₹5.83 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தொழில்துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறும். அதற்கு முக்கிய காரணமாக தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச பெரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதனால் சமூக வலைத்தளங்கள் நிறைந்த இக்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.