தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்தி வைக்கக் கோரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நிறுத்தி வைக்கக் கோரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நவ.4ம் தேதி தேர்தல் ஆணையம் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்கள் பங்கேற்றுனர்.
மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது முக்கிய வேலை என வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், ;எஸ்ஐஆர் மேற்கொள்ள உரிய கால அவகாசம் தர வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக திருத்தப் பணிகளை செய்ய முயற்சி செய்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமே' எனவும் முதலமைச்சர் கூறினார்.
இதையடுத்து எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு குரல் கொடுப்பவர் முதலமைச்சர். தமிழ்நாட்டு மக்களிடம் உங்களது குடியுரிமை சான்றிதழ் கொடுங்கள் என்றால் என்னால்கூட தர முடியாது' என அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். 'பழங்குடி மக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் இருக்க வாய்ப்பில்லை. எஸ்.ஐ.ஆர். குறித்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரபு நாடுகளில் பணிபுரியும் முஸ்லிம்கள் பலரும் எஸ்ஐஆரின் போது ஊர் திரும்ப முடியாததால் நீக்கப்படக் கூடும். தற்போதைய வாக்காளர் பட்டியலை 2002-2004 பட்டியலோடு பொருத்தி பார்த்ததில் 40% பெயர்களே முழுமையாக இருக்கும். 10 முதல் 20% வாக்காளர்கள் பெயர் விடுபட்டுப்போகும். சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் பெயர் விடுபட்டுப்போகும்' எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாக நடைபெறுகிறது என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். 'மக்களாட்சியின் அடித்தளமே வாக்கு வங்கிதான். தகுதியுள்ள ஒரு நபரின் பெயர்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது. அவசரமான எஸ்.ஐ.ஆரால் தான் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது' என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து SIR நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாகக் கடைப்பிடித்து, உரிய அவகாசம் தந்து, 2026 தேர்தலுக்குப் பின்பு, எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் S.I.R-ஐ நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.