வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு
திருவனந்தபுரம்: தமிழ்நாடு, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ளன. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் நெருங்கி வருவதால் இப்பணிகளுக்கு இரு மாநில அரசுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி கேரள அரசு சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி அருண் கூறும்போது, இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அங்கு வழக்கு தொடரலாமே என்று கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீலிடம் கேட்டார். தொடர்ந்து இந்த மனு தொடர்பாக நாளை (இன்று) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.
