வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகம் முழுவதும் மக்களுக்காக களத்தில் இறங்கிய திமுகவினர்: பல இடங்களில் திமுகவின் உதவியை நாடிய அதிமுகவினர்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் தமிழகம் முழுவதும் களத்தில் இறங்கி மக்களுக்கு திமுகவினர் உதவி செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் அதிமுகவினரே திமுகவின் உதவியை நாடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை கடந்த 4ம் தேதி தொடங்கி அவசர அவசரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 4ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் இருக்கின்ற 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கும் கணக்கீட்டுப் படிவத்தை வினியோகித்து, நிரப்பி திரும்பப் பெற்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றவேண்டும்.
இதற்கான பணிகளுக்காக பிஎல்ஓக்களை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆனால், பிஎல்ஓக்களுக்கு போதுமான பயிற்சி வழங்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டை அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளன. தமிழ்நாட்டில் 68,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இவற்றில், அரசுப் பணிகளில் இருக்கும் கடைநிலை ஊழியர்களே பெரும்பாலும் பிஎல்ஓக்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கே கணக்கீட்டுப் படிவத்தை நிரப்புவதில் பல குழப்பங்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு அதைப் பற்றி விளக்கி படிவங்களை நிரப்பச் செய்வதற்கு திணறி வருகிறார்கள். நிரப்பப்பட்ட படிவங்களை பிஎல்ஓக்கள் தங்களது ஸ்மார்ட்போனில் படம்பிடித்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சியில் பல பிஎல்ஓக்களிடம் ஸ்மார்ட் போன்கள் கூட இல்லாத நிலை இருக்கிறது. சென்னை மாநகராட்சியிலேயே இந்த நிலை என்றால், கிராமப்புறங்களின் நிலை இன்னும் கவலைக்குரியதாக இருக்கிறது. பெரும்பாலான பிஎல்ஓக்கள் படிவங்களை வாக்காளர்களிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்கள்.
எப்படி நிரப்புவது என்று தெரியாமல் வாக்காளர்கள் தவிக்கிறார்கள். பிஎல்ஓக்களுக்கும் வாக்காளர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் அளவுக்கு இதைப் பற்றிய தெளிவு அவர்களுக்கு இல்லை. தேர்தல் ஆணையம் கேட்கும் தகவல்கள் இங்கு பல வாக்காளர்களிடம் இல்லை. வாக்காளரின் கணக்கீட்டுப் படிவத்தின் முதல் பகுதியில் வாக்காளரது தாய், தந்தையரின் விவரங்கள் கேட்கப்படுகின்றன. அதாவது, 2025ம் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் விவரங்கள் இவை. பட்டியலில் பெயர் இருந்தால் பிரச்னை இல்லை.
இல்லாதவர்கள் என்ன செய்வதென்று குழம்பி போயிருக்கிறார்கள். சிலருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயரில்லை. இறந்தவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள், இருப்பவர்களும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். சில வாக்காளர்களுக்கு 2002 பட்டியலிலும், 2025 பட்டியலிலுமே பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, 2002 பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் ‘அய்யப்பன்’ என்று இருக்கிறது, தற்போதுள்ள பட்டியலில் ‘ஐயப்பன்’ என்றிருக்கிறது, இதையெல்லாம் யார் சரிபார்த்து எப்படி ஒரு மாதத்திற்குள் பட்டியல் தயார் செய்யப்படும் எனும் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறது.
ஏற்கனவே பீகாரில் இந்த எஸ்ஐஆர் நடைமுறையால் முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் குறிவைத்து நீக்கப்பட்டனர் என குற்றச்சாட்டு எழுந்தது. அதே பாணியில் தமிழ்நாட்டிலும் பாஜவிற்கு வாக்களிக்காத மக்களின் வாக்குகளை நீக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பீகாரைச் சேர்ந்தவர்கள் கூட வாக்களிக்க இந்த எஸ்ஐஆர் வழிவகுக்கிறது என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
இவ்வளவு குளறுபடிகள் நிறைந்த எஸ்ஐஆரை அவசர கதியில் செய்யாமல் முறையாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. ஒருபக்கம் எஸ்ஐஆருக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் அதே வேளையில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் யாரும் நீக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் உதவி எண்ணை அறிவித்தும், திமுக பிஎல்2க்கள் மூலம் நேரடியாக மக்களுக்கு உதவி செய்தும் வருகிறது திமுக.
களத்தில் திமுக மட்டுமே பிஎல்ஓக்களுக்கும் மக்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறது.
அதிமுக நிர்வாகிகள் களத்திற்கே வருவதில்லை. வந்தாலும் அவர்களுக்கு இந்த படிவங்களை எப்படி நிரப்புவது என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவினர் திமுக நிர்வாகிகளிடமே உதவியை நாடியிருக்கின்றனர். இதுபோன்ற நிலை பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. திமுக நிர்வாகிகளுக்கு கட்சியே பயிற்சியை வழங்கியது. அதுமட்டுமின்றி உதவி எண்களை அறிவித்து நிர்வாகிகள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் எஸ்ஐஆர் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்து வருகிறது.
லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பிருக்கும் எஸ்ஐஆரை கண்ணை மூடிக்கொண்டு அதிமுக ஆதரித்துவிட்டது. ஆனால் களத்தில் நிலைமையோ தலைக்கீழாக இருக்கிறது. சிலப்பகுதிகளில் வாக்காளர் திருத்தப் பணிகளில் குளறுபடிகளை அதிமுக நிர்வாகிகள் கண்டுபிடித்தாலும் அதற்கு பொறுப்பாளியாக இருக்கும் தேர்தல் ஆணையத்தை விட்டு திமுகவை குற்றம் சாட்டி வருகிறது. அதிமுக தலைமையின் இந்த முடிவை சொந்த கட்சியினரே விரும்பவில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.
