வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கண்டன பேரணி: தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு, ராஜ்தாக்கரே கட்சியும் பங்கேற்பு
மும்பை: மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக குற்றம் சாட்டி வரும் இந்தியா கூட்டணி மற்றும் எம்என்எஸ் கட்சிகள் இணைந்து நேற்று மும்பையில் கண்டன பேரணி நடத்தின. மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, இந்த குற்றச்சாட்டு வலுத்தது.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி, அடுத்த 4 மாதங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்று போனது எப்படி? என்று கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து பாஜ கூட்டணி ஆட்சியை பிடித்ததாக குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும், ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியும் இணைந்து மும்பையில் நேற்று கண்டன பேரணி நடத்தின. உத்தவ் தாக்கரே, சரத் பவார், எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், சரத்பவார் கட்சி எம்பி சுப்ரியா சுலே, உத்தவ் கட்சி மாஜி அமைச்சர் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
