தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் 78% படிவங்கள் வீடுவீடாக விநியோகம்: தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் 5 கோடி படிவங்கள் இதுவரை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சென்னை, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4ம் தேதி அன்று தொடங்கியது.
வீடு, வீடாக சென்று படிவங்களை கொடுத்து, வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை தேர்தல் அலுவலர்கள் செய்து வருகிறார்கள். வருகிற டிசம்பர் 4ம் தேதி வரை இந்த பணியை மேற்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பத்துடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்படும் படிவங்களை ஆய்வு செய்து படிவங்கள் வழங்கிய வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
வாக்காளர் உதவி மையங்களில் அலுவலக பணி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வாக்காளர்கள், தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் கணக்கீட்டு விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மாவட்ட வாரியாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை 78.09 சதவீத படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி படிவங்கள் அச்சடிக்கப்பட்டு இதுவரை 5 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 95 சதவீத படிவங்களும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 சதவீத படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், திருப்பூர், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் இன்னும் முழுமையாக எஸ்ஐஆர் படிவங்கள் அச்சிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவரை 4,713 பேர் ஆன்லைன் மூலமாக தங்களது படிவங்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
* தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி படிவங்கள் அச்சடிக்கப்பட்டு இதுவரை 5 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
* அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 95 சதவீத படிவங்களும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 சதவீத படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
* விருதுநகர், திருப்பூர், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் இன்னும் முழுமையாக எஸ்ஐஆர் படிவங்கள் அச்சிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
* வாக்காளர் படிவம் நிரப்புவது எப்படி?
வாக்காளர் படிவத்தை நிரப்புவது எப்படி என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: படிவத்தின் மேல் பாகத்தில் 2025 வாக்காளர் அட்டை குறித்த விவரங்களை எழுத வேண்டும். இடதுபக்கத்தில் உள்ள வாக்காளர் விவரங்கள் பகுதியில் 2002-2005 வாக்காளர் அட்டை இருந்தால் அதுதொடர்பான விவரங்களை எழுத வேண்டும். உறவினர் விவரங்களை வலது பக்கத்தில் குறிப்பிட வேண்டியதில்லை.
2025 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, 2002ல் வாக்காளர் பெயர் இல்லை என்றால், வலது பகுதியில் உள்ள வாக்காளரின் உறவினர் என்று உள்ள பகுதியில் தந்தை உள்ளிட்ட உறவினர் விவரங்களை குறிப்பிட வேண்டும். 2025 வாக்காளர் பெயர் மட்டும் இருந்து உறவினர்கள் யாரும் இல்லாவிட்டால், கீழ் உள்ள பகுதிகளை நிரப்ப தேவையில்லை. விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும். ஒரு படிவத்தை நிலை அலுவலர் வைத்துக்கொண்டு, மற்றொரு படிவத்தை ஒப்புகை சீட்டாக வாக்காளரிடம் கொடுத்து விடுவார். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.