வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல் நாளான நேற்று எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று SIR பணிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுக்க இப்போது வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. முதலில் பீகார் தேர்தலுக்கு முன்பு இந்தப் பணிகள் நடத்தப்பட்டது. இதற்கிடையே இப்போது நாடு முழுக்க தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், இது மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாகச் சொல்லி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இப்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று இதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று SIR பணிகளுக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. எஸ்ஐஆர் குறித்து மக்களவையில் விவாதிக்க பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

