வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக்கேடு: வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதியில் நடந்த “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், வெற்றியழகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், பகுதி செயலாளர்கள் நாகராஜன், ஐசிஎப் முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உண்மையான வாக்காளர் ஒருவர்கூட வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் திமுக நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். நவம்பர் 2ம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தையும் கூட்டினோம். அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி, கடந்த 11ம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் மாவட்ட தலைநகரங்களில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் பங்கேற்கக் கூடிய வகையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். நம்முடைய உணர்வுகளையெல்லாம் தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறோம். எஸ்ஐருக்கு எதிராக, மேற்குவங்கத்தில் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் எதிர்க்கட்சியும் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எதிர்க்கட்சியாக இல்லை. இப்படியே சென்றுக்கொண்டிருந்தால் எதிர்க்கட்சியாக மட்டுமல்ல. உதிரிக் கட்சியாக கூட இருக்க முடியாத ஒரு சூழ்நிலை நிச்சயம் ஏற்படும்.
அதாவது தங்களுடைய கட்சியை டெல்லியில் கொண்டுசென்று அடமானம் வைத்துவிட்டு அந்த எஸ்ஐஆர்-ஐ ஆதரித்து, அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக்கொண்ட நிலையில் அவர்கள் அடமானம் வைத்திருக்கிறார்கள். அதை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்லா கட்சிகளும் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்கிறோம். ஆனால், இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அதை ஆதரித்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும் வெட்கக் கேடு நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
மக்களைச் சந்திக்க அவர்களுக்கு தெம்பு இல்லை. அதனால்தான் இந்த குறுக்கு வழியை அவர்கள் நாடியிருக்கிறார்கள். எனவே, தொகுதி முழுவதும் ஒரு பூத் விடாமல் சுற்றிச் சுழல வேண்டும். அந்தக் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப நாமெல்லாம் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். எஸ்ஐஆர் பணி முடிய இன்னும் மீதமிருப்பது 15 நாட்கள்தான். எனவே, அந்தப் பணியை நிறைவேற்றித் தாருங்கள் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
