வாக்காளர் பட்டியல் விவகாரம்; உச்சநீதிமன்றத்தை அணுக கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி அம்மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்கக் கோரி அரசு சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் சிறப்பு தீவிர திருத்த பணிகளை டிசம்பர் 20ம் தேதிக்கு பின்னர் தொடங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி வழக்கை முடித்து வைத்தது.