வாக்குத் திருட்டுதான் மிகப் பெரிய தேச விரோத செயல் என்று மக்களவையில் முழங்கியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. 2024 மக்களவை தேர்தல் முடிந்த பிறகு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு அவரது வாக்கு திருட்டு குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் அதிகரித்து இருக்கிறது. இன்று வரை உரிய பதில் தேர்தல் ஆணையம் மூலமோ அல்லது ஒன்றிய அரசு சார்பிலோ நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. தட்டிக்கழித்துக்கொண்டே செல்கிறார்கள். ஆனால் உரிய முறையில் அவையில் பதிவு செய்ய வசதியாக தேர்தல் சீர்திருத்த விவாதத்தை பயன்படுத்தியிருக்கிறார் ராகுல்காந்தி.
வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு விழா கொண்டாட்ட விவாதம் என்ற இரையை போட்டு, அதன் மூலம் தேர்தல் முறைகேடுகளையும், இதுவரை தேர்தல் திருட்டுக்காக சட்டங்களை வளைத்ததையும், இனிமேல் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களையும் பற்றி அனல்பறக்க குறிப்பிட்டு இருக்கிறார். அவர் மட்டுமல்ல, அனைத்து கட்சி உறுப்பினர்களும் தேர்தல் சீர்திருத்தம் பற்றி மேற்கொள்ள வேண்டிய நடைமுறையை பற்றி பேச வைத்து எதிர்க்கட்சி தலைவராக தன்பங்கை சிறப்பாக சாதித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்தியா என்பது 150 கோடி மக்களின் பிணைப்பு. இதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குகள்.
தேர்தல் ஆணையராக யார் வர வேண்டும் என்பதில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஏன் இத்தனை அக்கறை காட்டுகின்றனர்? வாக்கு திருட்டைவிட மிகப் பெரிய தேச விரோத செயல் வேறில்லை என்று அவர் மக்களவை அதிர பேசியது பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்துக் கட்சிகளுக்கும் இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும், 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை அழிக்க அனுமதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அணுக அனுமதிக்க வேண்டும், தேர்தல் ஆணையர்கள் என்ன செய்ய விரும்பினாலும் தப்பிக்க அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று குடிமக்களின் ஓட்டு உரிமையை அவர் பாதுகாக்க பேசியது கவனத்தை ஈர்த்தது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவிலிருந்து இந்திய தலைமை நீதிபதி ஏன் நீக்கப்பட்டார்? தலைமை நீதிபதியை நீங்கள் நம்பவில்லையா? பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் செய்த பிறகும் கூட, பீகார் வாக்குப் பட்டியலில் 1.2 லட்சம் நகல் புகைப்படங்கள் ஏன் உள்ளன? நீங்கள் வாக்குப் பட்டியலைச் சுத்தம் செய்திருந்தால் ஏன் நகல் புகைப்படங்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் வருகின்றன என்பது அவரது நேரடி கேள்விகள். பதில் சொல்ல முடியாமல், அவரது பேச்சுக்கு வழக்கம் போல் பா.ஜ தரப்பில் இருந்து குறுக்கீடு மற்றும் கோஷங்கள் மட்டுமே வந்தன.
வந்தேமாதரம் விவாதம் நடத்தி, நேருவை பிரதமர் மோடி அவையில் விமர்சனம் செய்த பிறகு அவையில் அவருக்கு பதில் ராகுல்காந்தி வழங்கவில்லை. பிரியங்கா காந்திதான் வழங்கினார். அப்போதும் கூட நேருவை பற்றிய உங்கள் விமர்சனங்கள், கேள்விகளுக்கு இதுபோல் தனி விவாதம் நடத்தலாம். அது எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி. ஆனால் எப்போது நாட்டு மக்கள் பிரச்னை பற்றி விவாதிப்பீர்கள்? என்ற கேள்வி கேட்டு நிறுத்தினார். அப்போதே பா.ஜ உஷார் அடைந்து இருக்க வேண்டும். அவர்கள் உஷார் ஆவதற்கு முன்பு தேர்தல் சீர்திருத்த விவாதத்தில் நாட்டு மக்கள் மனதில் உள்ள அத்தனையும் கொட்டித்தீர்த்து சபாஷ் வாங்கி விட்டார் ராகுல்காந்தி.


