வாக்கு திருட்டு தான் மிக மோசமான தேசவிரோத செயல்: தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது; மக்களவையில் எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பரபரப்பு பேச்சு
புதுடெல்லி: மக்களவையில் நேற்று நடந்த எஸ்ஐஆர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘வாக்கு திருட்டு தான் மிக மோசமான தேச விரோத செயல்’ என்றும், ‘தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது’ என்றும் ஆளும் பாஜவை தாக்கி அதிரடியாக பேசினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக மக்களவையில் 10 மணி நேர விவாதம் நேற்று நடந்தது. இதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: வாக்கு திருட்டை விட மிகப்பெரிய தேச விரோத செயல் வேறெதுவுமில்லை. நீங்கள் (பாஜ) செய்யும் மிகப்பெரிய தேச விரோத செயல் வாக்குகளை திருடுவதுதான். ஏனென்றால் நீங்கள் வாக்குகளை அழிப்பதன் மூலம், இந்த நாட்டின் கட்டமைப்பை அழிக்கிறீர்கள். நவீன இந்தியாவை அழிக்கிறீர்கள். இந்தியாவின் கருத்தை அழிக்கிறீர்கள். ஆளும் தரப்பில் உள்ளவர்கள் இந்த தேச விரோத செயலை செய்கிறார்கள்.
நான் உங்கள் முன் 3 கேள்விகளை முன்வைக்கிறேன்.
* தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவிலிருந்து தலைமை நீதிபதி ஏன் நீக்கப்பட்டார்? தலைமை நீதிபதியை நீக்க என்ன அவசியம் இருக்க முடியும்? தலைமை நீதிபதியை நாம் நம்பவில்லையா? அவர் ஏன் தேர்வுக்குழுவில் இல்லை? எதிர்க்கட்சி தலைவராக நான் அந்த குழுவில் இருப்பதால் அதில் எடுக்கப்படுவது ஒரு ஜனநாயக முடிவு என கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்தில் எனக்கு எந்த குரலும் இல்லை. அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் நடக்கும். தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளனர்?
* எந்தவொரு தேர்தல் ஆணையரும் அவர்களின் எந்த செயலுக்கும் தண்டிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய கடந்த 2023 டிசம்பரில் ஒன்றிய அரசு சட்டத்தை மாற்றியது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் தேர்தல் ஆணையருக்கு இந்த விதிவிலக்கு பரிசை ஏன் வழங்க வேண்டும்?
* தேர்தல் முடிந்த 45 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்தை அனுமதிக்கும் சட்டம் ஏன் இயற்றப்பட்டது? அதற்கான தேவை என்ன? இது வெறும் தரவு பற்றிய கேள்வி அல்ல, இது தேர்தலை திருடுவது பற்றிய கேள்வி.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையத்தை பாஜ கட்டுப்படுத்துகிறது. இதுதொடர்பான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அரியானா வாக்காளர் பட்டியலில் 22 முறை ஒரு பிரேசிலிய பெண் இடம் பெற்றுள்ளார்.
மற்றொரு பெண்ணின் பெயர் ஒரே தொகுதியில் 200 க்கும் மேற்பட்ட முறை இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அரியானாவில் தேர்தல் திருடப்பட்டது என்பதையும், தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி நான் ஏற்கனவே நிரூபித்துள்ளேன்.
பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் 1.2 லட்சம் நகல் புகைப்படங்கள் ஏன் உள்ளன? நீங்கள் வாக்குப் பட்டியலை சுத்தம் செய்ததாக கூறிய பிறகும் இது எப்படி நடந்தது? ஆனால் இந்த கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் எந்த பதிலும் இல்லை. இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல தலைசிறந்த ஜனநாயகமும் கூட. பன்முகத்தன்மை கொண்ட இந்த ஜனநாயகம்தான் நமது மிகவும் சக்திவாய்ந்த சொத்து. நவீன இந்தியாவின் முழு கருத்தையும் ஒன்றிணைத்து, மாபெரும் தேசத்தை கட்டியெழுப்ப வைக்கும் அந்த ஜனநாயகம் இந்த மக்களால் (பாஜ) தாக்கப்படுகிறது. அவர்கள் அதை அழிக்கிறார்கள், அது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அவர்களுக்கே கூட தெரியும்.
கடந்த 1948, ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தியின் மார்பில் 3 தோட்டாக்கள் துளைக்கப்பட்டு, நாதுராம் கோட்சேவால் நமது தேசத்தின் தந்தை படுகொலை செய்யப்பட்டார். இன்று பாஜவில் உள்ள நமது நண்பர்கள் கோட்சேவை அரவணைப்பதில்லை. அவரை ஒதுக்கித் தள்ளுகின்றனர். ஏனெனில் கோட்சே ஒரு சங்கடமான உண்மை. ஆனால் அவர்களின் திட்டம் இத்தோடு முடியவில்லை. அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் வாக்குகளில் இருந்து தோன்றி உள்ளன. எனவே, ஆர்எஸ்எஸ் அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி உள்ளது.
இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தகுதியின் அடிப்படையில் அல்ல, குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியதுதான் முக்கியம். சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய 2 அமைப்புகளிலும், அவர்களின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது. இதை நான் ஆதாரமின்றி சொல்லவில்லை. நான் போதுமான ஆதாரங்களை ஏற்கனவே முன்வைத்துள்ளேன். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். அவரது பேச்சின் போது பல இடங்களில் பாஜ எம்பிக்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
* தேர்தல் ஆணையர்களுக்கு ராகுல் பகிரங்க எச்சரிக்கை
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ராகுல் காந்தி பேசுகையில், ‘‘உண்மையில் தேர்தல் சீர்திருத்தம் என்பது மிகவும் எளிமையானது. ஆனால் அரசு அதைச் செய்ய விரும்பவில்லை. தேர்தல் சீர்திருத்தத்திற்கு பின்வருவனவற்றை செய்தால் போதும்.
* தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கணிணி மூலம் சரிபார்க்க கூடிய வாக்காளர் பட்டியலை வழங்குங்கள்.
* சிசிடிவி காட்சிகளை அழிக்க அனுமதிக்கும் சட்டத்தை திரும்பப் பெறுங்கள்.
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டமைப்பு என்ன என்பதை எங்களிடம் கூறுங்கள். அதை அணுகுவதற்கான அனுமதியை எங்களுக்கு கொடுங்கள். எங்கள் நிபுணர்கள் சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்கட்டும். இன்று வரை எங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கிடைக்கவில்லை.
* இறுதியாக, தேர்தல் ஆணையர் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதை செய்துவிட்டு தப்பிக்க அனுமதிக்கும் சட்டத்தை மாற்றுங்கள்.
இவ்வளவுதான் தேர்தல் சீர்திருத்தம். தேர்தல் ஆணையர்கள் தொடர்பான சட்டம் அவர்கள் எந்த தவறு செய்தாலும் தப்பிக்கலாம் என நினைக்க வைக்கிறது. அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கவலைப்படாதீர்கள். நாங்கள் அந்த சட்டத்தை மாற்றப் போகிறோம். அதன் பின் உங்கள் தில்லுமுல்லுகளை கண்டுபிடிக்கப் போகிறோம்’’ என்றார்.
வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்
* விவாதத்தில் காங்கிரஸ் மூத்த எம்பி மணிஷ் திவாரி பேசுகையில், ‘‘எஸ்ஐஆர் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் இல்லை. தேர்தலில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய 100 சதவீதம் விவிபேட் சிலிப்களை எண்ண வேண்டும். இல்லாவிட்டால் பழைய படி வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்’’ என்றார்.
* ‘‘எஸ்ஐஆர் நடவடிக்கை வாக்காளர் பட்டியலை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கை அல்ல, வாக்காளர்களை நீக்குவதற்கான நடவடிக்கை’’ என்றார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி.
* ‘‘தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடந்து கொண்டால் மட்டுமே தேர்தல் சீர்த்திருத்தங்கள் சாத்தியமாகும்’’ என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
* வென்றால் நியாயமானது தோற்றால் மாற்றணுமா?
ஒன்றிய அமைச்சரும் ஜேடியு எம்பியுமான ராஜீவ் ரஞ்சன் சிங் விவாதத்தில் பேசுகையில், ‘‘மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், கர்நாடகாவில் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) வெற்றி பெற்றீர்கள். ஆனால் மகாராஷ்டிரா, அரியானா, பீகாரில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென பழுதாகிவிட்டனவா? வாக்கு இயந்திரத்தில் எதிர்க்கட்சிகள் இரட்டை வேஷம் போடுகின்றன. இதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களுக்கு உங்களுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிக்கவில்லை என்றால் வாக்கு இயந்திரத்தை மாற்றிட வேண்டுமா?’’ என்றார். ‘‘வாக்கு இயந்திரத்தை முதலில் 1987ல் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியவர் ராஜிவ் காந்தி. அதன்பிறகு 1991ல் நரசிம்மராவ் ஆட்சியில் அது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டதை நினைவுபடுத்துகிறேன்’’ என்றார் பாஜ எம்பி நிஷிகாந்த் துபே.


