வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுப்பது தொடர்பான வழக்கை 2 மாதத்தில் பரிசீலிக்க வேண்டும்: ஒன்றிய தகவல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: த.வெ.க. வழக்கறிஞர் அணியின் சென்னை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, பண பட்டுவாடா குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் என்ன? வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த கட்சிகள், வேட்பாளர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? பண பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க மொபைல் ஆப், இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதா? பண பட்டுவாடா தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை புகார்கள் பெறப்பட்டன என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கோரினேன். அதில், 2 கேள்விகளுக்கு மட்டும் தேர்தல் ஆணைய பொது தகவல் அதிகாரி பதிலளித்தார்.
இதுசம்பந்தமான உத்தரவை எதிர்த்து, ஒன்றிய தகவல் ஆணையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2வது மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தபோதும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, அதை பரிசீலித்து தகவல் அளிக்குமாறு ஒன்றிய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும். 2 மாதங்களில் முடிவு எடுக்காவிட்டால் மனுதாரர் இந்த வழக்கை புதுப்பித்து கொள்ளலாம் என உத்தரவிட்டது.


