Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விசிகவின் வாக்குகள் கொத்து கொத்தாக விழும் 2026லும் திமுக ஆட்சி மலர ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன் பேச்சு

சிதம்பரம்: சிதம்பரத்தில் இளையபெருமாள் சிலை திறப்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: எண்ணற்ற பல திட்டங்கள், விடியல் பயணம் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் அந்த வரிசையில் இன்றைக்கு உங்களுடன் ஸ்டாலின் என்கிற வீடுதேடி வரும் அரசு, 45 நாட்களில் தீர்வு காணும் அரசு என்று அறிவித்து இந்திய மாநிலங்களுக்கே வழிகாட்டும் வகையில் ஒரு முன்மாதிரி ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர்.

அயலக கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாநில அரசு முன்வந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெறக் கூடிய வகையில் அந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். முதல்வருடன் நாங்கள் ஏன் கைகோர்த்து நிற்கிறோம், களத்தில் நிற்கிறோம் என்பதற்கு இதுதான் முதன்மை காரணம்.

மக்கள் நலன்களில் அக்கறை செலுத்துகின்ற அரசாக, மக்களை வீடுதேடி சந்திக்கின்ற அரசாக, அவர்களின் குறைகளை கேட்டறிந்து 45 நாளில் தீர்ப்போம் என உறுதியளிக்கிற அரசாக, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றிக் காட்டியிருக்கிற அரசாக, திமுக அரசு விளங்குகிறது. அதிலும் நமது முதலமைச்சர் மிகச் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இப்படி பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி முன்மாதிரி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற முதலமைச்சருக்கு என்றென்றைக்கும் நாம் உற்ற துணையாக இருப்போம். மீண்டும் திமுக அரசே அமையும், திராவிட மாடல் அரசு அமையும். 100 வாக்குகளில் 25 சிறுத்தைகளின் வாக்குகளாக இருக்கும். ஒரு வாக்குகூட சிந்தாமல், சிதறாமல் மதச்சார்பற்ற கூட்டணிக்கு கொத்துக் கொத்தாக விழும் வகையில் என்ற அளவுக்கு நாம் களப்பணி ஆற்றுவோம். 2026ல் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர்வதற்கு அனைத்து தமிழர்களும் ஓரணியில் திரள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.