Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 நாடுகள் பயணத்தின் தொடக்கமாக இந்தோனேசியா சென்றார் பிரதமர் மோடி: ஜகார்த்தா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு: அதிபர் சுபியாந்தோவுடன் இன்று பேச்சுவார்த்தை

ஜகார்த்தா: பிரதமர் மோடி 3 நாடுகள் பயணத்தின் தொடக்கமாக நேற்று இந்தோனேசியா சென்றடைந்தார். அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ விமான நிலையத்திற்கு நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட் கொள்கை, மகாசாகர் தொலைநோக்கு பார்வை மற்றும் சுதந்திரமான, திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் மோடி, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்ட பிரதமர் மோடி, பயணத்தின் முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றடைந்தார். தலைநகர் ஜகார்த்தா விமான நிலையத்தில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நேரில் வந்து பிரதமர் மோடியை கை குலுக்கி வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வரவேற்க வந்திருந்த அந்நாட்டு அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை அதிபர் சுபியாந்தோ அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இந்தோனேசிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நடன நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ஆர்வமுடன் ரசித்து கைதட்டி பாராட்டினார். பின்னர் பிரதமர் மோடி தங்கும் ஓட்டலில் இந்திய வம்சாவளிகள் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். அவர்களின் ராமாயணம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளைப் பிரதமர் பார்வையிட்டார். இந்தோனேசியாவின் பொக்கிஷமான பொம்மலாட்டக் கலையான ‘வாயாங் குலித்’ மூலம் ராமாயண கதை விளக்கப்பட்டதை மோடி கண்டு ரசித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜகார்த்தா வந்து சேர்ந்தேன். விமான நிலையத்திலேயே என்னை வரவேற்ற அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் செயல் என்னை நெகிழ வைத்தது. 2018ல் நாங்கள் எங்கள் உறவுகளை விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தினோம். இது எங்கள் மக்களுக்கு நல்ல பயனளித்தது. இந்த பயணத்தில், மேலும் பல்வேறு துறைகளில் இந்த கூட்டாண்மைக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் நோக்கத்தில் அதிபர் சுபியாந்தோவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

இங்குள்ள இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பும் என்னை நெகிழ வைத்தது. அவர்களின் பாசமும், இந்தியாவின் முன்னேற்றத்தின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளன ’’ என தெரிவித்தார். பிரதமர் மோடி - அதிபர் சுபியாந்தோ இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது. அதில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் பிரதமர் மோடியும், அதிபர் சுபியாந்தோவும் யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தைப் பார்வையிட உள்ளனர். பல நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோயில், இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாகக் கருதப்படுகிறது. இந்தோனேசியா பயணத்தை முடித்துக் கொண்டு நாளை பிரதமர் மோடி ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். அங்கு அவர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசை சந்தித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து நியூசிலாந்து செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.

* போர் விமானங்கள் புடைசூழ வரவேற்பு

பிரதமர் மோடியின் விமானம் இந்தோனேசிய வான் எல்லைக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படையில் உள்ள போர் விமானங்களான எப்-16 மற்றும் சுகோய்-30 விமானங்கள் பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாதுகாப்பு அளித்து ஜகார்த்தா விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றன. இதில், ஒற்றை இன்ஜின் கொண்ட எப்-16 போர் விமானம் அமெரிக்காவின் தயாரிப்பாகும். இரட்டை இன்ஜின் கொண்ட சுகோய்-30 விமானம் ரஷ்யாவின் தயாரிப்பாகும்.