Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விருப்பாச்சி மலைவாழை பிரபலமான கதை!

கொடைக்கானல் தாண்டிக்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற விவசாயியின் அவகோடா சாகுபடி குறித்த தகவல்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அவரது சாகுபடி அனுபவத்தின் தொடர்ச்சி இது... ``அவகோடா மரத்தோட அடிப்பாகத்துல ஈரமா இருக்கறதால, பூஞ்சாணம், பாசி தாக்கும். இதிலிருந்து காக்க, 6 அடிக்கு போடோ பேஸ்ட் துத்த சுண்ணாம்பு பேஸ்ட்டை பெயிண்ட் மாதிரி அடிக்கணும். மரத்தோட அடிப்பாகத்துல கதம்ப நாரைப் போட்டுத் தேய்ச்சி பாசிகளை எடுத்துட்டு போடோ பேஸ்ட் அடிக்கணும். இது பாசி வராம தடுக்கும். ஊட்டச்சத்தாவும் இருக்கும். மரங்கள் வறட்சியைத் தாங்கவும் உதவும். அதுகூட வேப்பம்புண்ணாக்கு மண்ல போட்டா, எதிர்ப்புசக்தி இன்னும் கூடும். வேரில் வரக்கூடிய காயங்கள் வழியா பூஞ்சானம் நுழையாம இருக்கவும், நிமட்டோட்ஸ் தாக்காம இருக்கவும் வேப்பம்புண்ணாக்கு தூள்களைத் தூவி விட்டோம்ன்னா நல்லாருக்கும்’’ என்கிறார். தாண்டிக்குடி பகுதி மலைவாழைப் பழம், `விருப்பாச்சி மலைவாழை’ என்ற பெயரில் புவிசார் குறியீடு பெற்ற பழம். இதைகுறித்து பேசிய ரவிச்சந்திரன், “இங்க விளையுற மலை வாழைப்பழத்தோட கீப்பிங் க்வாலிட்டி நல்லாருக்கும். மற்ற மலைப்பழங்களை விட இது விளைச்சல் கூடுதல், விலையும் கூடுதல். வாரத்துக்கு 7 லட்சம் பழங்கள் சென்னைக்கு போகுது. வாழையடி வாழைன்னு தொடர்ச்சியா அதே எடத்துல அடுத்தடுத்த கன்னு வந்துக்கிட்டே இருக்கும். இந்தப் பழங்களை பஸ் வசதி இல்லாதப்ப, குதிரைல ஏத்தி விருப்பாச்சி சந்தையில் வித்ததால விருப்பாச்சி மலைவாழைன்னு பேர்வந்துச்சி. ஏக்கருக்கு 400 வாழைக்கன்னு வைக்கலாம்.

வெள்ளாட்ட மேய்ச்சிப்பாரு; வெள்ளை வாழையை சீச்சிப்பாருன்னு சொல்வாங்க. வெள்ளாட்டை மேய்க்கிற அளவைப் பொறுத்து, ஆடு கொழுகொழுன்னு இருக்கும். அதுமாதிரி, மலைவாழைல வருஷத்துக்கு 3 தடவை மரத்தைச் சுத்தி காஞ்சி போன பட்டைகளை மரத்துலர்ந்து பிரிச்சி எடுத்து, தூர போட்டுடணும். எந்த அளவுக்கு இந்தப் பட்டைகளை சீச்சி வாழையை சுத்தமா வச்சிருக்கமோ, அந்தளவுக்கு குலை நல்லா தள்ளும். மரம் 10லர்ந்து 12 அடி உயரம் வளரும். மரம் எவ்ளோ உயரமா வளருதோ அந்தளவுக்கு பெரிய குலையாகத் தள்ளும்’’ என்றார் அவரை, சவ்சவ் ஆகிய கொடி காய்கறிகளும் இவரது தோட்டத்தில் உள்ளன. ``பந்தல் போட்டு கம்பி பின்னி சவ்சவ், அவரை கொடிக் காய்கறிகளை ஒரே நிலத்தில் சுழற்சி முறைல விளைவிக்கறோம். அவரை கோடையில் காய்க்கும். கார்த்திகை மாசத்துல நட்டா, பங்குனி, சித்திரைல விளைச்சல் கொடுக்கும். மார்ச் ஏப்ரல் வந்துச்சின்னா, ஒரு கிலோ 100லர்ந்து 150 ரூபாய் வரை விற்கும். சமவெளியில போட்ட அவரை, பருவநிலை மாற்றத்தால மலைப்பகுதிகளிலும் விளையுது. மார்ச் ஏப்ரல்ல இருந்து ஆகஸ்ட் வரைக்கும் அவரை காய்க்கும். ஏப்ரல்ல சவ்சவ் நட்டுடோம்ன்னா, அவரை காய்ப்பு முடியறதுக்குள்ள சவ்சவ் மேல வந்துடும். அவரை காய்ப்பு முடியும்போது, சவ்சவ் காய்த்து அறுவடைக்கு வந்துடும். அவரைக்கு பஹ்டிலா, பீன்ஸ்ல முருங்கை பீன்ஸ், சோனாலி பீன்ஸ் போன்ற ரகங்களையும் போடலாம். இதுல நல்ல

வருவாய் கிடைக்குது” என்றார்.

காபி பற்றி கூறுகையில், ``தாண்டிக்குடியில மண்டல காபி ஆராய்ச்சி நிலையம் இருக்கு. இந்திய காபி போர்டு மெம்பர்ல நானும் ஒருத்தன். பெங்ளூர்ல வேர்ல்ட் காப்பி கான்ஃபரன்ஸ் டபள்யூ சீ சீன்னு நடத்தனாங்க. அதுல 185 நாடுகள்ல இருந்து கலந்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் இந்திய காபி பிரபலமாகி பிரேசில், வியட்நாம் காபிக்கொட்டைக்கு நிகரா இந்திய காபிக்கொட்டைக்கும் மதிப்பு உருவாச்சு. அரபிக்கா காபி தமிழ்நாட்ல அதிகமா இருக்கு. உரம் மட்டும் போடுறேன். பூச்சிமருந்து அடிகிறதில்ல. காப்பியை அடிப்படையா வச்சித்தான் நம்ம மொத்த விவசாயமே இருக்கு. காபி ஒரு சொத்து மாதிரி. மத்த ஊடுபயிர்ல வர்ற வருமானத்தை வச்சி `தசைகூலி’ (தொழிலாளர்களுக்கான ஊதியம்) கொடுப்போம். 10 ஏக்கர்ல 2 ஏக்கர் காய்கறிக்கு ஒதுக்கிடுவோம். அதுல சவ்சவ்வோ, பீன்ஸோ, அவரையோ போட்டுடுவோம். அதுலர்ந்து வர்ற வருமானத்த எடுத்து வேலையாட்களுக்கு கூலி குடுக்கறது, உரம் வாங்கறது, மத்த பராமரிப்பு வேலைகள் பூரா அந்த செலவுல பண்ணிடுவோம். காபின்ற சொத்துலர்ந்து 2 மாசத்துல பலன் தரும்போது அதை மொத்தமா லாபமா எடுத்துக்கலாம். காபி 1 ஏக்கருக்கு 400 கிலோ விளைஞ்சா, 10 ஏக்கருக்கு 4 டன் கிடைக்கும். காபி கிலோ 540 ரூபாய்க்கு சராசரியா விக்குது. அதுக்கு ஏத்த மாதிரி வருமானமும் கிடைக்குது’’ என பேசி முடித்தார்.

தொடர்புக்கு:

ரவிச்சந்திரன்: 97878 88503.