Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காரியாபட்டியில் அரசு பேருந்துகளின் சேவை குறைப்பு? மாணவர்கள் பயணிகள் அவதி

காரியாபட்டி, செப்.17: காரியாபட்டியில் அரசு டவுன் பஸ்கள் குறைவாக இயங்குவதால் மாணவர்கள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்திலிருந்து, மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி, திருமங்கலம், கல்லுப்பட்டி, நரிக்குடி திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காரியாபட்டி அரசு பணிமனையில் இருந்து, மதுரை மற்றும் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து இயங்கி வருகிறது. இதே போல மதுரையிலிருந்து, அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு டவுன் பஸ்கள் காரியாபட்டிக்கு வந்து செல்கின்றன.

கடந்த சில நாட்களாக, காரியாபட்டி பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காரியாபட்டிக்கு முதல் பேருந்து வருகிறது. அதை தொடர்ந்து மதுரையிலிருந்து, காரியாபட்டி வழியாக மாந்தோப்பு, கரிசல்குளம், கழுவனச்சேரி, வையம்பட்டி, இலுப்பை குளம், வெள்ளாகுளம், அல்லிகுளம், சித்து மூன்றடைப்பு ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறது. இந்நிலையில் காலை நேரத்தில் 7.30 மணியிலிருந்து 9 மணிவரை மதுரை பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை.

போக்குவரத்து நிர்வாகம் கொடுத்த கால அட்டவணையின்படி மதுரை பெரியார் நிலையத்திலிருந்து டவுன் பஸ்கள் இயங்குவதில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் கிராமப் புறத்திலிருந்து தான் அதிகமான மாணவர்கள் வருகின்றனர். மாலை நேரங்களில் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், மாணவர்கள் கிடைக்கும் பஸ்சில், கூட்ட நெரிசலில் ஏறிச் செல்கின்றனர்.

இது குறித்து காரியாபட்டி சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: காரியாபட்டி நகர் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. சுற்றுவட்ட பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக காரியாபட்டி வந்து செல்கின்றனர். நகரத்தில் பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் வராத காரணத்தால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் காரியாபட்டி பேருந்து நிலையத்தில், பள்ளி மாணவர்கள் அதிகமாக இருக்கும் நேரங்களில ஒருசில பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்ல மறுத்து விடுகின்றன. பொதுமக்கள் நலன் கருதி காரியாபட்டி பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்து அரசு பேருந்துகளை முறையாக கண்காணித்து குறிப்பிட்ட நேரத்தில் இயக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.