180 பயணிகளைக் காப்பாற்றிய கேப்டன்!
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையைத் தனது அசாத்தியத் துணிச்சலாலும் சமயோசித புத்தியாலும் எதிர்கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் சாகசம் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஃப்ளை துபாய் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது காக்பிட்டில் எதிர்பாராத விதமாக அசாதாரண சூழல் உருவானது. கடுமையான சவாலான நிலையிலும், சற்றும் பதற்றமடையாமல் விமானத்தைத் திறம்படக் கையாண்டு பாதுகாப்பாகத் தரையிறக்கினார் கேப்டன் ஸ்மித் மச்சார். இதனால் விமானத்திலிருந்த சுமார் 180 பயணிகளின் உயிர் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இந்த வீரச் செயலைப் பாராட்டும் வகையில், காயத்திலிருந்து மீண்டு வரும் கேப்டனுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார். அவரது மன உறுதி மற்றும் துணிச்சலை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். இவரின் இந்த தைரியமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரும் இவரை நிஜ வாழ்க்கை நாயகன் எனப் பாராட்டி வருகின்றனர்.
மீண்டும் வருகிறார் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன்!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லர் வெளியான இரண்டு மணி நேரத்திலேயே 23 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
முதல் பாகத்தில் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டிய ரஜினிகாந்த், இந்தப் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் சிலை கடத்தல் கும்பலை வீழ்த்திய அவர், அதன் பின்னணியில் செயல்படும் மிகப்பெரிய வலையமைப்பைத் தேடிச் செல்வது போல் டிரெய்லர் அமைந்துள்ளது. அடையாளத்தை மறைத்து ஓட்டுநராக இருக்கும் முத்துவேல் பாண்டியன் மீண்டும் ஆக்சன் களத்தில் இறங்கும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
ரஜினியின் மாஸ் காட்சிகளுடன் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோரின் மீள்வரவும், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. டிரெய்லரில் இடம்பெற்ற மர்மமான உருவம் ஹிருத்திக் ரோஷனா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


