Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விழுப்புரம் அருகே சுடுகாடு இல்லாததால் சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியல்

* வருவாய், காவல்துறை பேச்சுவார்த்தை

* புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சுடுகாடு வசதி இல்லாததால் சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைகலைத்தனர்.விழுப்புரம் அருகே பனங்குப்பம், புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் உடல்நலம் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது சுடுகாடு வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடீரென கோலியனூர் கூட்ரோடு பகுதியில் சாலையிலேயே சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விழுப்புரம்-புதுவை சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பனங்குப்பம் புதிய காலனியில் இறந்தவர்களுக்கு சுடுகாடு இல்லாததால், வாய்க்காலுக்கு அருகே புதைத்து வருகிறோம். இதனால், இறந்தோரை புதைக்க தோண்டும் போது, வாய்க்காலில் இருந்து வெளியேறும் விஷவாயு தாக்கி, பலருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

இந்த பிரச்னை சம்பந்தமாக நாங்கள் பல முறை, தாசில்தார் உட்பட பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், இப்பிரச்னை சம்பந்தமாக நாங்கள் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்து போஸ்டர் வைத்து கொண்டு சடலத்தோடு ஊர்வலமாக வந்ததோடு, மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நீங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் செய்யக்கூடாது என்றும், உங்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் முறையாக கொண்டு செல்லுங்கள், நாங்களும் இந்த பிரச்னையை அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு, சடலத்தை பழைய இடத்திலேயே புதைக்க பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில்  ஈடுபட்டனர்.