Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி தொகுதி அலசல்

இதில் ஒரு பேரூராட்சியும், விக்கிரவாண்டி, காணை, கோலியனூர் ஒன்றியங்களை சேர்ந்த பல கிராமங்களை உள்ளடக்கியும் கிழக்கு மேற்காக பரந்துவிரிந்த தொகுதியாகவும் உள்ளது. பெருமளவு விவசாய பூமியை கொண்ட இங்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதி இல்லாத சூழலே உள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில், ஆண் வாக்காளர் 1,09,977, பெண் வாக்காளர் 1,12,791, மாற்று பாலினத்தவர் 28 என மொத்தம் வாக்காளர்கள் 2,22,796 என உள்ளனர். இந்த தொகுதியும் பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட தொகுதியாகும்.

2011ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அப்போது அந்த கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி 78,656 வாக்குகளை பெற்றார். அதாவது, 51.72 % வாக்குகள் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராதாரமணி 63,759 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். அவர் எடுத்த வாக்குகளின் சதவீதம் 41.93% ஆகும். பின்னர் 2016ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் ராதாமணி போட்டியிட்டு 63,757 வாக்குகளை பெற்றார். அதாவது 35.97% ஆகும். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சேவல்வேலு 56,845 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார், அவர் பெற்றது 32.07% ஆகும்.

கடந்த 2019ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக எம்எல்ஏவாக இருந்த ராதாமணி உயிரிழந்த நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வன் களமிறங்கினார். அவர் 1,13,766 (44.46%) வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்திக்கு 68,842 (36.48%) கிடைத்தது. ஆனால் சற்றும் மனம் தளராத புகழேந்தி தொடர்ந்து சிறப்பாக மக்கள் பணியாற்றி, 2021ல் மீண்டும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டார். இதில் 93,730 வாக்குகளைப் பெற்றார். அதாவது 48.41% ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் 84,157 (43.47%) வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்வரின் கூட்டணி பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தபோது அங்கு மேடைக்கு வந்த எம்எல்ஏ புகழேந்தி திடீரென உடல்நிலை கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். உடனடியாக இடைத்தேர்தல் தேதி அறிவித்து தேர்தலும் நடந்தது. அப்போது திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்டு 1,23,095 (63.22%) வாக்குகளை அள்ளினார்.

இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில், மாறாக பாஜவோடு இணைந்து பாமக இடைத்தேர்தலில் களம் கண்டது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். அவருக்கு 28.69% கிடைத்தது. 2011 தேர்தல் முதல் கடந்த இடைத்தேர்தல் வரை, வாக்குகளிலும் சரி, சதவீதத்திலும் இதற்கு முன்னர் போட்டியிட்டதில் அதிகவாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை அன்னியூர் சிவாவுக்கு கிடைத்தது. இந்த தொகுதியில் வன்னியர்கள், பட்டியல் இன மக்கள் மட்டுமின்றி இதர பிரிவினர்கள், இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றியடைந்த தொகுதி இது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவே மீண்டும் களம் காணும் சூழல் நிலவுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதாலும், கடந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததாலும் பாமக அதிக வாக்குகளை பெற்றதாலும் இம்முறை பாமக இங்கு சீட் கேட்டு இலை தலைமையிடம் துண்டு போட்டுள்ளது.

ஆனால் பிளவுபட்ட பாமகவால் பின்னடைவே எனக்கூறி அதிமுகவும் தங்களுக்கான தொகுதி எனக்கருதி போட்டியிட விரும்புகிறது. இதற்காக கட்சித் தலைமையிடம் முன்னணி நிர்வாகிகள் சிலர் விருப்ப மனுக்களையும் அளித்துள்ளனர். இருப்பினும் கூட்டணி கட்சி தலைமைதான் தொகுதி யாருக்கு? என்பதை முடிவு செய்யும் என்பதால் இலை, மாம்பழ கட்சியினரின் காத்திருப்பு தொடர்கிறது. ஆனால் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை திமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியீடு, அரசு கலைக்கல்லூரி, விக்கிரவாண்டியில் உழவர்சந்தை, தொகுதி மக்கள் வந்து செல்ல நேரடி பஸ் வசதி, தொழிற்பேட்டை அமைக்க நிலம் ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை சுமார் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றி உள்ளது. இதனால் விக்கிரவாண்டியில் திமுகவுக்கு மக்களிடம் செல்வாக்கு விசாலாமாகி உள்ளது என்றால் மிகையாகாது.