விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு திருச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம்: ஆவணங்கள் ஒப்படைப்பு
திருச்சி: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி பரக்குமாரிடம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிபிஐ சம்பந்தமான வழக்குகள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்பதால் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து 41 பேர் இறந்தது தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கரூர் நீதிமன்றம் ஊழியர்கள் நேற்றுமுன்தினம் திருச்சி தலைமை குற்றவியல் நீதிபதி நசீர்அலியிடம் ஒப்படைத்தனர்.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பான ஒரு காரும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்துவது உள்ளிட்ட உத்தரவுகளுக்கு இனி திருச்சி நீதிமன்றத்ைத தான் சிபிஐ அதிகாரிகள் அணுக வேண்டும். சிபிஐ விசாரணை முடிந்து இறுதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, அந்த குற்றப்பத்திரிகையை பொறுத்து (தண்டனை காலம் அதிகரிக்கும் பட்சத்தில்) இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற வாய்ப்புள்ளது.