ஒரு பக்கம் மேகதாது அணை கட்டும் பிரச்னை, மறுபக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஆளுநர் 3வது இடத்திற்கு தள்ளிய விவகாரம் என்று தலையை பிய்த்துக்கொள்ளும் இரண்டு மிகப்பெரிய உரிமைப்போராட்டத்தின் மத்தியில் தமிழ்நாடு வந்து நிற்கிறது. இந்த இரண்டு விவகாரமும் தமிழ்நாட்டின் உணர்வுடன் கலந்தது. புதிதாக அமைந்து இருக்கும் தவெக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என ஒன்றிய ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் ஸ்ரீராஜ்பூஷன் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார். காவிரி பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018ல் அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடகா கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என கூறியுள்ளது ஒன்றிய அரசுக்கு தெரியுமா?
இதற்கு கர்நாடகா ஒப்புதல் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி எம்பி கேள்விக்கு இந்த பதில் கிடைத்து இருக்கிறது. இந்த ஆண்டு காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை இன்று வரை கர்நாடகா திறந்து விடாததால் டெல்டா பகுதியில் பயிர்கள் கருகி வரும் சூழலில், கொதித்து போய் இருக்கும் விவசாயிகளுக்கு பேரிடியாக இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்திலேயே தெரிவித்து இருக்கிறது.
ஒன்றிய அரசின் இந்த பதிலால் தமிழ்நாட்டு விவசாயிகள் திகைத்துப்போய் நிற்கிறார்கள். கர்நாடகாவிற்கு ஆதரவாக மோடி அரசு ஓரவஞ்சனை செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கடிதம் மட்டுமே எழுதியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் விஜய். நாடாளுமன்றத்தில் மேகதாது விவகாரத்தில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம் அளிக்கிறது. அந்த பதிலை திரும்பப் பெற வேண்டும்.
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடகாவுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது. காவிரியில் பாசனம் பெறும் பிற மாநிலங்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். கடைமடை மாநில அனுமதி இல்லாமல் மேலே உள்ள மாநிலங்கள் அணை கட்ட முடியாது. காவிரி மன்ற இறுதித்தீர்ப்பு 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி கர்நாடகா அணை கட்ட முடியாது. எனவே கூட்டாட்சித் தத்துவம், நீதிமன்ற தீர்ப்புகளை காக்க பிரதமர் மோடி உடனே தலையிட வேண்டும் என்று பிரதமர் ேமாடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் முதல்வர் விஜய்.
மேகதாது அணை போன்ற இரு மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்து தரப்பு ஆலோசனையை பெற வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வு அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான நடவடிக்கை கூட இங்கு எடுக்கப்படவில்லை. கடிதம் மட்டுமே எழுதப்பட்டு இருக்கிறது.
இன்னொரு பக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை உலகிற்கு தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம், தேசிய கீதத்திற்கு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த விஷயத்திலும், மேகதாது அணை விவகாரத்திலும் முதல்வர் விஜய் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? தமிழ்நாடே காத்திருக்கிறது.
