Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உடல்நலனில் உஷார்...!

தமிழ்நாட்டை பொறுத்தவரை நடப்பாண்டில் கோடைக்காலம் முன்கூட்டியே துவங்கி விட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதமே, கத்திரி வெயில் காலங்களை போல வெயில் கொளுத்தி எடுத்தது. வேலூரில் கடந்த வாரம் அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெப்பநிலை நிலவியதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் வேறு அறிவிக்கப்பட்டதால், மனு தாக்கல், வேட்பாளர்கள் பிரசாரம், முக்கிய தலைவர்கள் பிரசாரம், வாக்குப்பதிவு என கடந்த ஏப்ரல் மாதம், பரபரப்பாக காணப்பட்டது. ஆனாலும், வெயிலுக்கேத்த வகையில் தலைவர்களின் பிரசார வியூகத்தில் ஒரு சில மாற்றங்களை காண முடிந்தது. அதேநேரம் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தில் வாக்குப்பதிவும் 85 சதவீதம் வரை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலமான கேரளாவை கடவுளின் தேசம் என்பார்கள். அதிலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான மூணாறை, ‘தென்னகத்து காஷ்மீர்’ என அழைப்பதுண்டு. ஆனால், அம்மாநிலத்திலும் வெப்பநிலை இயல்பு நிலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பலர் ஹீட் ஸ்டிரோக், நீர்ச்சத்து குறைபாடால் மிகவும் அவதியடைந்தனர். குறிப்பாக, மூணாறில் வரலாறு காணாத வெயிலால், சுற்றுலாப்பயணிகள், மக்கள் கடும் அவதியடைந்த சம்பவமும் நிகழ்ந்தது. சென்னையிலும் வெயில் 104 - 105 டிகிரி வரை அதிகரிக்கும்; தமிழகத்திலும் 2 - 3 டிகிரி வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என்கிற அறிவிப்பும் மக்களை மேலும் கவலையடைய செய்துள்ளது.

இந்த சூழலில், நாளை மறுதினம்(மே 4) முதல் அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. மறுபுறம் ஹீட் ஸ்டிரோக் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், உடலில் நீர்ச்சத்துகள் குறைபாடை தவிர்க்கவும் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வெப்ப அலையினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் ஓஆர்எஸ் கரைசலை இலவசமாக வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனை போதிய அளவில் கையிருப்பு வைக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹீட் ஸ்டிரோக் பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவும் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹீட் ஸ்டிரோக்கால் பாதிக்கப்பட்டவரின் உடல் வெப்பநிலையானது 104 டிகிரியை தாண்டும். உடல்ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் வெளிப்புறத்தை விட, உள்பகுதியில் உள்ள உறுப்புகள், திசுக்கள் கடுமையாக பாதிக்கும். இதனால் உயிருக்கே ஆபத்தான சூழல் ஏற்படும்.

எனவே, இதனை தடுக்க உடனடி சிகிச்சை முறை அவசியம் என்பதால், உடலில் வெப்பநிலையை குறைப்பதற்கான உணவு வகைகளை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் பருக வேண்டும். வெளியே செல்லும்போதும் கட்டாயம் குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகள், பழச்சாறுகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக காரமான உணவுகள், இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். பணிச்சூழல், அவசியம் என்ற சூழலை தவிர, வெயிலில் அலைவதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. அக்னி நட்சத்திர காலமும் துவங்க உள்ளதால், உடல்நிலையில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய

காலக்கட்டமிது.