மணலி: மணலி புதுநகர் அருகே குண்டும், குழியுமான விச்சூர்-ஈச்சங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மணலி அருகே விச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மணலி புதுநகருக்கு செல்ல விச்சூர் - ஈச்சங்குழி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகள், கன்டெய்னர் யார்டுகள் என ஏராளமான தொழில் நிறுவனங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் மாநகர பேருந்து, லாரி, கார் போன்ற வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும் பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் சாலை பள்ளங்களில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.
இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களை கூறி இதுவரை சாலை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் ஆங்காங்கே பள்ளமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பொன்னேரி சட்டமன்ற தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம், விச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பேட்ச் ஒர்க் போட்டு காலம் கடத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலை பழுது காரணமாக தடம் எண்:36எம் மாநகர பேருந்து சரிவர இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து பல்வேறு வகைகளில் வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் அந்த நிறுவன வாகனங்கள் செல்வதற்கு சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே உடனடியாக இந்த சாலையை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விச்சூர்-ஈச்சங்குழி சாலையை தரமாக அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் சாலை சீரமைக்கும் பணி துவங்கும்,’ என்றனர்.

