Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணைவேந்தர் பதவிகளை விரைவில் முதல்வர் நிரப்புவார்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகள் விரைவில் நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தமிழகத்தில் இயங்கும் அரசு பல்கலைக் கழகங்களில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லை. துணை வேந்தர் நியமனங்களை மாநில முதல்வர் நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து தமிழகத்தில் துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் ஆளுநருக்குதான் உண்டு என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்ததை அடுத்து, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட சட்டப் பிரிவு அரசிதழில் வெளியிடப்பட்டது.  இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் நடந்த வழக்கில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்து 6 வார காலம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் உயர்கல்வித்துறை கோவி.செழியன் கூறியதாவது: சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் 1800 மாணவர்கள் முதல் பட்டதாரிகளாக பட்டங்களை பெற்றுள்ளனர். இது பாராட்டத்தக்கது. அதேபோல நானும் முதல்பட்டதாரி தான்.

தமிழகத்தில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை முதல்வரே நியமனம் செய்யலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதை பின்பற்றி தமிழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை நிரப்புவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.