புதுடெல்லி: திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை வேல் யாத்திரை செல்ல அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ்.யுவராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையை காரணமாக வைத்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கூடாது என்ற தமிழக காவல்துறையின் வாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வேல் யாத்திரைக்கு கடந்த பிப்ரவரி 14ம் தேதி அனுமதி மறுத்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து யுவராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பெலா. எம்.திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானதே என்பதால், இதில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.


