மதுரை: பாஜ சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம். இவர் நேற்று மதுரை வந்தார். ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவரை சந்தித்த போலீசார், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லக்கூடாது என்றனர். இதனால் போலீசாருக்கும், பாஜவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டதாக கூறி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியை கண்டித்து, அவரது படத்துடன் வேலூர் இப்ராகிம் உட்பட பாஜ நிர்வாகிகள் கோஷமிட்டனர்.
இதனால், அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதனை தொடர்ந்து வேலூர் இப்ராகிமை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அவரை விடுவிக்கக்கோரி ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பாஜவினர், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து மேலும் சில நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல்நிலையம் முன்பு அமர்ந்து பாஜவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அகற்றினர்.


