வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 9ஆம் வகுப்பு மாணவனிடம் ஜிபே மூலம் ரூ.45,000 டிஜிட்டல் மோசடி..!!
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நகர் பகுதியில் வசித்து வரும் கோகுல் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இத்தகைய குறுஞ்செய்தியை 8ம் வகுப்பு மாணவன் எடுத்து பார்த்துள்ளார். குறுஞ்செய்தியில் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து 70 ஆயிரம் டாலர் வந்துள்ளது. இதற்கான சுங்கக்கட்டணமாக ரூ.45 ஆயிரம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை அடுத்து, அந்த மாணவன் தனது அக்கா வங்கி எண்ணிலிருந்து முதலில் ரூ.5 ஆயிரமும், பிறகு ரூ.15 ஆயிரமும், ரூ.25 ஆயிரம் என மூன்று முறையாக ரூ.45 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பியவர்களை தொடர்பு கொண்ட போது உடனடியாக தங்களுக்கு பார்சல் வந்துவிடும் என கூறியுள்ளனர். மேலும் பணம் அனுப்பவும் குறுஞ்செய்தியில் கூறியுள்ளனர். இதற்கு மாணவன் எங்களிடம் வேறு பணம் இல்லை என்று கூறியவுடன் தொடர்பு எண்ணை பிளாக் செய்துள்ளனர்.
இது தொடர்பாக, அவரது அக்காவிற்கு தெரிவித்ததுடன் புகார் அளிக்க குடியாத்தம் காவல் நிலையத்திற்கு சென்றனர். குடியாத்தம் காவல் துறையினர் உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்க சிறுவனின் அக்காவிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமுக்கு சென்று புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சிறுவன் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.