வேலூர் அடுத்த பொய்கையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
வேலூர்: பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று ஒட்டு மொத்தமாக ரூ.80 லட்சத்துக்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் சாதாரணமாக ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை விற்பனை நடைபெறும். கடந்த சில வாரங்களில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் வந்ததால் விற்பனையும் ரூ.60 முதல் 70 லட்சம் வரையே இருந்தது.
இந்நிலையில் இன்றைய சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் குவிந்தது. இவற்றுடன் கால்நடைகள் உட்பட பிற கால்நடைகளுக்கு தேவைப்படும் பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்து வர்த்தகம் ரூ.80 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மழையின் காரணமாக தீவனம் தட்டுப்பாடு இல்லை. இதனால் மாடுகள் வரத்து அதிகரித்துள்ளது. கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. விற்பனையும் ரூ.80 லட்சத்துக்கு நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்றனர்.