வேளச்சேரி ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
இதுகுறித்து வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், வேளச்சேரி ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் அரியலூர் மாவட்டம், திருமழாபாடியைச் சேர்ந்த ஜோதிவேல் (62) எனத் தெரியவந்தது. அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய பெண், தனது தந்தை மதுபோதையில் உளறியதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருமழாபாடிக்கு நேற்று தனிப்படை போலீசார் விரைந்து சென்று, அங்கு வீட்டில் இருந்த ஜோதிவேலை கைது செய்தனர். பின்னர் அவரை வேளச்சேரிக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்துள்ளார். இதனால் அவரை உறவினர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும், சுயதொழில் துவங்க அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் கடனுதவி கிடைக்கவில்லை. நீண்ட காலமாக எவ்வித வேலையும் கிடைக்காத விரக்தியில், வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பியதாக தெரியவந்தது. மேலும், அவர் கடும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.