கடந்த பிப்ரவரி மாதத்தில் 24 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் 25.6 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு (பெடா) அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 24,09,362 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இவற்றில் டூவீலர்கள் 17,00,505. இது முந்தைய ஆண்டு இதே மாதத்தை விட 25.02 சதவீதம் அதிகம். மூன்று சக்கர வாகனங்களை பொறுத்தவரை 1,17,130 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 24.39 சதவீதம் உயர்வு. இதில் எலெக்ட்ரிக் ரிக்ஷாக்கள் 34,848. இதுபோல் 3,94,768 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 26.12 சதவீத வளர்ச்சியாகும் என பெடா தெரிவித்துள்ளது.
இதுபோல் நடப்பு நிதியாண்டில் இதுவரை 2,69,52,913 வாகனங்கள் விற்றுள்ளன. முந்தைய ஆண்டை விட இது 12.13 சதவீத வளர்ச்சி. இதில் 1,94,58,477 டூவீலர்கள், 12,53,658 மூன்று சக்கர வாகனங்கள், 9,57,853 வணிக பயன்பாட்டு வாகனங்கள், 42,50,900 பயணிகள் வாகனங்கள் அடங்கும் என பெடா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 89,418 டிராக்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 36.35 சதவீத வளர்ச்சியாகும். நடப்பு நிதியாண்டில இதுவரை 9,67,849 டிராக்டர்கள் விற்றுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 19.66 சதவீதம் உயர்வாகும். கடந்த மாதத்தில் அதிகபட்சமாக மகிந்திரா நிறுவனம் 21,471, ஸ்வராஜ் 16,897, இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் 11,564, எஸ்கார்ட்ஸ் 10,125, டாபே 8,892, ஜான் டீரே 6,673, எய்ச்சர் 5,546 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளன என பெடா தெரிவித்துள்ளது.

