நூற்றுக்கணக்கில் பழமரங்கள்... ஒன்றரை ஏக்கரில் காய்கறி சாகுபடி... முன்னாள் காவலர் உருவாக்கிய உணவுக்காடு!
ஊரைச் சுற்றி தரிசுக்காடு. அதன் நடுவே பத்து ஏக்கரில் மட்டும் பசுமைக்காடு. அந்தக்காடுதான், மனோகரனின் உணவுக்காடு. ஆம், கரூரிலிருந்து கோவை செல்லும் சாலையில் க.பரமத்திக்கு அருகேயுள்ள வேட்டையார் பாளையத்தில் உள்ள மனோகரனின் நிலம் ஓர் உணவுக்காடாகவே விளங்குகிறது. 36 வருடம் காவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்றபின், முழுநேரமாக விவசாயம் செய்து வரும் மனோகரன், இயற்கை விவசாயி, நாட்டு விதைகள் சேகரிப்பாளர், இயற்கை விவசாயப் பயிற்சியாளர், விவசாயம் சார்ந்து உரையாற்றுபவரென பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்க்கிறார். அவரது, உணவுக்காட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேட்டையார் பாளையத்திற்கு சென்ற நம்மை வரவேற்று உபசரித்து பேசினார்.
``அந்த காலத்திலேயே அப்பா இயற்கை விவசாயம்தான் செய்தார். நெல், கரும்பு, தானியங்கள் என அனைத்தும் பயிரிட்டார். அதன் தொடர்ச்சியாக இப்போது நானும் விவசாயத்தில் இறங்கி விட்டேன். கரூரில்தான் காவலராக பணிபுரிந்தேன். பணியிலிருந்தபடியே, எங்களது நிலத்தில் மரப்பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கினேன். பணி ஓய்வுக்குப்பிறகு, உணவுக்காட்டை உருவாக்கும் நோக்கத்தில் பலவகையான மரங்களை நடத்தொடங்கினேன். இப்போது, எனது நிலத்தில் 135 ரகங்களில் 3000க்கும் அதிகமான மரங்கள் இருக்கின்றன.சொந்தமாக 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், பத்து ஏக்கரில் உணவுக்காடும், காய்கறி சாகுபடியும் செய்து வருகிறேன். மீதமுள்ள இடத்தில், ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறேன். இயற்கை விவசாயத்தின் மீது இவ்வளவு ஆசை வர, எனது முன்னோடிகள்தான் காரணம். சுபாஷ் பாலேக்கர், நம்மாழ்வார் போன்றோர்களது உரையைக் கேட்டுத்தான் விவசாயத்திற்குள் வந்தேன். அவர்களிடம் இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சியும் எடுத்துள்ளேன்.
எனது தோட்டத்தில் 150 மா, செம்மரம் 250, சந்தனமரம் 75, முருங்கை 250, நெல்லி 50, நாவல் 50, கொய்யா 200 என பல வகையான மரங்கள் உண்டு. அதுபோக, ஆப்பிள், ருத்திராட்சம், திருவோடு, ரம்புட்டான், கிராம்பு, அவகோடா போன்ற மரங்களும் உள்ளன. சீசன் நேரத்தில் தக்காளி, கத்தரி, வெண்டை, பந்தல் காய்கறிகளென ஒன்றரை ஏக்கரில் சாகுபடி செய்கிறேன்.இந்த சாகுபடிக்கு தேவையான உரங்களை நானே எனது தோட்டத்தில் தயாரிக்கிறேன். பழ மரங்கள் அனைத்திலிருந்தும் சாகுபடி வருகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் கொய்யாவில் இருந்து மட்டுமே 3 லட்சம் வரை வருமானம் பார்ப்பேன். சராசரியாக வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் கிடைக்கும். அதாவது மாதம் ஒரு லட்சம் வருமானம் கிடைக்கும். அதில், வேலை ஆட்களுக்கு கூலி, உரம் தயாரிப்பு என 40 ஆயிரம் செலவானாலும் மீதி 60 ஆயிரம் லாபமாகக் கிடைக்கும்.
எனது தோட்டத்தில் கிடைக்கும் எந்த விளைபொருட்களையும் நான் சந்தைக்கோ, வியாபாரிகளுக்கோ விற்பது கிடையாது. எனது வாடிக்கையாளர்கள் மக்கள்தான். அதனால், நான் நேரடியாகவே அவர்களிடம் விற்பனை செய்கிறேன். இயற்கை முறையில் விளைந்த பழங்கள் என்பதால் பல தரப்பினரும் விரும்பி வந்து வாங்குகிறார்கள். அதனால், எனது விளை பொருட்களை விற்பனை செய்வது எளிதாக இருக்கிறது.அதுமட்டுமல்ல, எனது தோட்டத்திற்கு இதுவரை 8500 மாணவர்கள் வந்திருக்கிறார்கள். விவசாயமென்றால் என்ன? அதில், இயற்கை விவசாயமென்றால் என்ன? என்பது பற்றியெல்லாம், நான் அவர்களுக்கு உரை ஆற்றியிருக்கிறேன். இயற்கை விவசாயத்திற்காக அரசு மானியங்கள் பெற்றிருக்கிறேன். விதை சேகரிப்பைப் பொருத்தவரை, அழிந்துகொண்டிருக்கிற நாட்டு ரக விதைகளை சேகரித்து விற்பனை செய்து வருகிறேன். அந்த வகையில், இயற்கை விவசாயம் செய்வதன் மூலம், நல்ல வருமானமும், மனநிறைவும் அடைகிறேன்’’ என நெகிழ்ச்சியாக பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
மனோகரன்: 94430 08689
* தனது தோட்டத்தில் விளையும் காய் கறிகளில் 50 சதவீதத்தை விற்பனைக்கும், 50 சதவீதத்தை விதைக்காகவும் பயன்படுத்தும் மனோகரன், பாரம்பரிய நாட்டுரக காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து, அதிலிருந்து விதை எடுப்பதுதான் சிறந்த முறை எனக் கூறுகிறார்.
*கொரோனா காலத்திற்கு முன்பு தனது தோட்டத்தில் 70 விதமான நாட்டு சுரைக்காயை சாகுபடி செய்து அசத்தியிருக்கிறார் மனோகரன். இவை அனைத்துமே பாரம்பரிய நாட்டு ரகங்கள் என்பதுதான் ஹைலைட். அனைத்து விதையையும் தனி ஆளாய் சேகரித்து தனது தோட்டத்தில் விளைவித்து, அதிலிருந்து கிடைக்கும் விதைகளை பரவலாக்கும் நோக்கத்தில் இதைச் செய்தேன் என்கிறார்.

