வேதாரண்யம் பகுதியில் பெய்த மழையால் பாதியான உப்பு உற்பத்தி: உற்பத்தியாளர்கள் வேதனை
வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகாவில் 3000 ஏக்கரில் உணவு உப்பும், 6000 ஏக்கரில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பும் மொத்தம் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. வேதாரண்யம் பகுதியில் கடந்த 9 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. ஆண்டு தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு நாள் தோறும் லாரி, மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் அடிக்கடி பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி இந்த ஆண்டு பல முறை பாதிக்கப்பட்டது. உப்பளங்களில் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக அடிக்கடி பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதித்தது.
ஆண்டு உற்பத்தி 9,000 ஏக்கரில் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி சரிபாதி அளவு தான் அதாவது 3 லட்சம் மெட்ரிக் டன் நடந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் வேதனையடைந்துள்ளனர். இந்த ஆண்டு விற்பனை போல மழைக்கால விற்பனைக்காக குறைந்த அளவே இருப்பு உள்ளது.
குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை சேமித்து உப்பை மழையில் கரைந்து விடாமல், பனைமட்டை, மற்றும் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர். குறைந்த அளவே உணவு உப்பு இருப்பு இருந்தாலும், தற்போது ஒரு டன் உப்பு ரூ.2000 முதல் 2,500 மட்டுமே விற்பனையாகிறது. நாளொன்றுக்கு 10 முதல் 15 லாரிகள் மட்டுமே உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.