வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் பல்லாவரம் தொகுதியில் உட்கட்சிப்பூசல் என்ற சலசலப்பே இருக்கக் கூடாது: ஒன் டூ ஒன் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு
சென்னை: வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும். பல்லாவரம் தொகுதியில் உட்கட்சிப்பூசல் என்ற சலசலப்பே இருக்கக் கூடாது என்று ஒன் டூ ஒன் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் கூறிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர்.
மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. ஆனாலும், தேர்தல் பணிகளை அனைத்து வகைகளிலும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணிகளையும் செய்து வருகிறது.
இதற்கிடையே, உட்கட்சி பூசல் தொடர்பான பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் வகையிலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பணிகளை நிர்வாகிகள் சரிவர செய்து வருகிறார்களா?, வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை கண்டறியும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி நிர்வாகிகளை தனித் தனியாக சந்தித்து வருகிறார். அதன்படி, 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை முதல்வர் தனித்தனியே சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது பொதுமக்களுக்கு அரசின் சாதனை திட்டங்கள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது? தேர்தல் வியூகம், தொகுதிகளின் செயல்பாடுகள் என்ன? தொகுதி வாரியாக தேர்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்து நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார்.
இதுவரை 37 நாட்களில் 79 சட்டமன்ற தொகுதிகளில் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில், புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவின் பலம், பலவீனம் குறித்தும் வேட்பாளர் தேர்வு தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தல் பணிகளை முடுக்கி விடும் வகையில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த முறை தோல்வியுற்ற வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் என்று அந்த தொகுதி நிர்வாகிகளிடம் முதல்வர் கண்டிப்புடன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாவரம் தொகுதியில் உட்கட்சிப்பூசல் என்ற சலசலப்பே இருக்கக் கூடாது என்றும் அந்த தொகுதி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
