ரிஷிவந்தியம்: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க பெரும்பான்மை இடங்களைப் பெற்று, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 19ம் தேதியுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் விபிஜி ராம்ஜி வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணித்தள பொறுப்பாளர்களாக ஆளுங்கட்சியான த.வெ.க நிர்வாகிகள் மட்டுமே தன்னிச்சையாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சியாக இருக்கும் விசிகவை சேர்ந்த ஒருவரைக்கூட இப்பணியில் நியமிக்கவில்லை எனக் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதி முழுவதும் கடுமையான வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் ரிஷிவந்தியம் தொகுதியில் த.வெ.க மற்றும் விசிக இடையே நேரடி மோதல் போக்கு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. வாணாபுரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அந்தப் போஸ்டர்களில், ஊரகத் துறையே, மாவட்ட நிர்வாகமே, வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்ற தலைப்புடன் விபிஜி ராம்ஜி யார் அப்பன் வீட்டு வேலை?
தமிழ்நாடு அரசு அமைய உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் விபிஜி ராம்ஜி வேலை திட்டம் ஆளுங்கட்சிகாரர்களாகிய நீங்கள் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் ஏதேனும் போட்டு ஓட்டுப் போட்டார்களா? ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள 125 முகாம்களில், விசிகவினருக்கு ஒரு முகாமில் கூட இப்பணித்தள பொறுப்பாளர் வழங்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


