Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் பட்டப்பகலில் விசிக பிரமுகர் முகம் சிதைத்து படுகொ**: 7 பேர் கும்பலுக்கு வலை

சென்னை: பல்லாவரம் அருகே விசிக பிரமுகர் முகம் சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (எ) மைனா குட்டி (47). இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். இவர் மீது பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்தார். இந்நிலையில், நேற்று திருநீர்மலை அம்பேத்கர் சிலை அருகே தனது நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்டு விட்டு, கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பைக் மற்றும் ஆட்டோவில் ஹெல்மெட் அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் அன்பழகனை சுற்றிவளைத்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அவர்களின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க அன்பழகன் அருகில் இருந்த திமுக கட்சி அலுவலகத்திற்குள் சென்றார். இருந்த போதிலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று கொடூரமாக முகத்தை சிதைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அன்பழகன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அன்பழகன் பம்மல் நாகல்கேணி, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திடீர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த அன்பழகனை, திமுக பிரமுகர் ஒருவர் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அன்பழகன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அக்கம் பக்கத்தினரிடமும் அன்பழகன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.‌ அதனால் அவர்கள் யாரேனும் அன்பழகனை வெட்டிக் கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் மீது வழக்குகள் அதிகமாக இருந்ததன் காரணமாக அன்பழகன் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், சமீப நாட்களாக அவர் திருநீர்மலை பகுதியில் சுற்றி வந்து, கட்சி பணிகளை செய்து வந்த நிலையில், அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து வந்து, இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் திருநீர்மலை பிரதான சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களை அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.