தஞ்சாவூர்: விசிக சாலை மறியல் போராட்டத்தில் எஸ்எஸ்ஐ கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் விசிகவினர் வாழ்த்து பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அனுமதி இல்லாத இடத்தில் வைத்ததால் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலர்கள் அதை நேற்று காலை அகற்றினர். தகவலறிந்து விசிகவினர் 10க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாநகராட்சி அலுவலகம் சென்று அலுவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே காந்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் விசிகவினரிடம் வழி விடுமாறு கூறினர். இதில் ஒரு வாலிபர் அவசரமாக செல்ல வேண்டும் என மறியல் செய்தவர்களிடம் கெஞ்சினார். ஆனால் அவர்கள் வழிவிட மறுத்ததால் அந்த வாலிபருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து தஞ்சை மேற்கு காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரஹீம் தலைமையிலான போலீசார் சமாதானப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அந்த வாலிபர் ஒருமையில் பேசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த எஸ்எஸ்ஐ அவர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வாலிபரும் பதிலுக்கு எஸ்எஸ்ஐ கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் எஸ்எஸ்ஐயின் தொப்பி கழன்று ரோட்டில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார், அந்த வாலிபரை குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வாகனத்திற்கு பின்னால் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த மற்றொரு வாலிபரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் எஸ்எஸ்ஐ கன்னத்தில் அறைந்தவர் தஞ்சாவூர் விளார்ரோட்டை சேர்ந்த ஆகாஷ்(28) என்பதும், பிராய்லர் கோழி வியாபாரம் செய்வதும், மற்றொரு வாலிபர் திருக்கானூர்பட்டியை சேர்ந்த ஐயப்பன் (27) என தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை மேற்கு காவல்நிலை போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
போலீஸ் ஸ்டேஷனில் போதையில் எஸ்எஸ்ஐயை தாக்கிய வாலிபர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தோமச்சிபாளையத்தை சேர்ந்தவர்கள் சேரன் (20), திவாகர் (19). உறவினர்களான இருவரும் சேலம் குரங்குச்சாவடியில் மீன்கடையில் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இருவரும், சொந்த ஊருக்கு செல்ல சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது கடும் போதையில் இருந்த இருவரும், வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி ரகளை செய்தனர்.
அங்கிருந்தவர்கள் இருவரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் எச்சரித்து, அனுப்பி வைத்துள்ளனர். அரை மணி நேரத்தில் மீண்டும் போதையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இருவரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு என்பதால் 2 போலீசார் மட்டும் இருந்துள்ளனர். அதில் ஒருவர் இதுபற்றி விசாரிக்க வெளியே சென்றுள்ளார். எஸ்.எஸ்.ஐ. சரவணவேலனிடம் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடடு கட்டிப்புரண்டு தாக்குதல் நடத்திய நிலையில் எஸ்எஸ்ஐ, நெஞ்சில் பலத்த நகக்கீறல் காயங்களும் ஏற்பட்டுள்ளது.அவரை பலமாக தாக்கிய சேரன் ஓட்டம் பிடித்துள்ளார். திவாகர் மட்டும் போதையில் மயங்கி கிடந்தார். எஸ்எஸ்ஐ தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



