வருசநாடு அருகே 3 மாதத்திற்கு பிறகு யானைகஜம் அருவியில் நீர்வரத்து: மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி
வருசநாடு: வருசநாடு அருகே யானைகஜம் அருவியில் 3 மாதங்களுக்கு பிறகு தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது உப்புத்துறை மலைக்கிராமம். இங்குள்ள யானை கஜம் அருவி பிரசித்திபெற்றது. இந்த அருவியில் குளிக்க தடை உள்ளது. போதிய மழை இல்லாததால் கடந்த 3 மாதங்களாக இந்த அருவி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் யானை கஜம் அருவியில் தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
அருவிக்கு நீர்வரத்து காரணமாக உப்புத்துறை, ஆத்துகாடு, வாய்க்கால்பாறை, ஆட்டுப்பாறை, கோவில்பாறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுபாடு நீங்கும் என கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், இங்கு அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆத்துக்காடு மலைக்கிராமத்தை சேர்ந்த மாரிச்சாமி கூறுகையில், `யானை கஜம் அருவி பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க வசதியாக தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். இந்த அருவியை சுற்றுலா தலமாக அறிவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.