வாணியம்பாடி அருகே நள்ளிரவு போதையில் தகராறு; கணவனை வெட்டிக்கொன்று சடலத்துடன் காத்திருந்த மனைவி: விடிந்தபின் காவல் நிலையத்தில் சரண்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே குடும்ப தகராறில் கணவனை நள்ளிரவு அரிவாளால் சரமாரி வெட்டிக்கொன்ற மனைவி, விடிய விடிய சடலத்துடன் காத்திருந்து அதிகாலை காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் ஊராட்சி, புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(40), விவசாயி. இவரது மனைவி ரம்யா(35). இவர்களுக்கு 14 மற்றும் 9 வயதில் 2 மகள்களும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் குமார் மது பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு குமார் போதையில் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரம்யா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவன் குமாரை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குமார் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது 3 குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், ரம்யா விடிய விடிய கணவரின் சடலத்தின் அருகே காத்திருந்தார். தொடர்ந்து நேற்று அதிகாலை வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று ரம்யா சரணடைந்தார். மேலும் போலீசாரிடம் ‘தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால், கடும் மன உளைச்சலில் இருந்தேன். அவரது தொல்லை தாங்க முடியாமல் வெட்டிக்கொன்றுவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
உடனடியாக வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து ரம்யாவை கைது செய்தனர். இதற்கிடையில் எழுந்த 3 குழந்தைகளும் தந்தை இறந்துவிட்டதை அறிந்தும், அம்மாவை தேடியும் கதறி அழுதன. தகவலறிந்த எஸ்பி அக்ஷய் அனில் வாகரே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.



