திருப்பத்தூர்: வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாத கல்குவாரியில் உடலில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரியில் பெண்ணின் சடலம் கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் அரூரை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சசிகலா (52) என்பது தெரியவந்தது. மேலும் சசிகலா 24 சவரன் நகைகள் மற்றும் ரூ.25,000 பணத்துடன் காணாமல் போனதாக அவரது கணவர் அசோகன் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் 4 பேரிடம் விசாரணையைத் தொடங்கினர்.
கணவர் அசோகன் மற்றும் மருமகன் அஸ்லம் ஆகியோருக்குக் கடன் பிரச்சனை இருந்துள்ளது. மனைவியின் பெயரில் சொத்து இருந்ததால், சொத்துத் தகராறு காரணமாகக் கணவன்-மனைவிக்கு இடையில் தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கணவர் அசோகன் மருமகன் அஸ்லம் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து சசிகலாவைக் கொலை செய்து, வாணியம்பாடி அருகே உள்ள செயல்படாத கல்குவாரியில் சசிகலாவின் சடலத்தை வீசிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




