கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்வது வழக்கம். மேலும் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகள், ஊர்வன பறவை இனங்கள் பாதுகாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பூங்கா தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. வார நாட்களில் 1000 முதல் 5000 வரை பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 15000 மேற்பட்ட பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் மேற்படி பூங்காவில் வனவிலங்குகள் பரிமாற்றம் நடப்பது வழக்கம். எந்த விலங்குகள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளதோ அந்த விலங்குகளை இந்தியாவில் உள்ள மற்ற வனவிலங்கு பூங்காவில் இருந்து விலங்குகள் கொடுத்து பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு ஜோடி ஒட்டகச்சிவிங்கியில் ஒன்று கடந்த ஆண்டு இறந்துவிட்டதால் தற்போது ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது.
இதேபோல் பெண் ஒட்டகச்சிவிங்கி மற்றும் காட்டு கழுதை கடந்த ஆண்டு இறந்துவிட்டதால் இனப்பெருக்கத்திற்கு ஆண் காட்டு கழுதை மற்றும் பெண் ஒட்டகச்சிவிங்கி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு பதில் சிங்கவால் குரங்குகளை கொண்டு வருவதற்காக மைசூர் வனவியல் பூங்காவில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒட்டகச்சிவிங்கி மற்றும் காட்டு கழுதை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரி குதிரை இல்லாததால் இதுகுறித்து இந்தியாவில் உள்ள மற்ற வன உயிரியல் பூங்காவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான வேலைகளும் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
