கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. இன்ஸ்டா பிரபலமான இவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பெண் என்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி நிர்வாகிகள் மிரட்டுவதாகவும் கூறி நேற்று முன்தினம் திடீரென தவெகவில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக்கொள்வதாக கூறி கட்சியில் இருந்து வைஷ்ணவி விலகினார்.
இந்நிலையில் கோவையில் பாஜ தேசிய மகளிரணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெண்கள் மற்ற துறைகளில் செல்ல விரும்பினால் ஆதரவு தெரிவிக்கும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குடும்பங்கள் அரசியலுக்கு செல்லும்போது ஆதரவு கொடுப்பதில்லை.
இருந்தும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், மக்கள் பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய உரிய அங்கீகாரத்தை வழங்கக்கூடிய கட்சி எது என தெரிந்து கொண்டு சேர வேண்டும். அப்படிப்பட்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி மக்கள் பணி செய்ய பாஜவில் இணைந்து செயலாற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.

