Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வானதிக்கு சீட் அதிமுகவில் எதிர்ப்பு

தே.ஜ. கூட்டணியில், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் பெற பாஜ தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுக்கும், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் வடவள்ளி சந்திரசேகருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதி வேண்டும் என வானதி சீனிவாசன் பிடிவாதமாக கேட்டார். ஆனால் அப்போது அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அம்மன் அர்ச்சுணன் அத்தொகுதியை விட்டு தர மறுத்தார்.

அதனால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலையிட்டு சமரசப்படுத்தி, அவரை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வைத்தார். அத்தொகுதியில் வெற்றி பெற்ற அம்மன் அர்ச்சுணன் கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித பணிகளையும் செய்யாததால் வாக்காளர்களிடம் அதிருப்தி நிலவுவதால், வருகின்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதிக்கு மாற விரும்பினார். இதேபோல வானதி சீனிவாசனும் தோல்வி பயம் காரணமாக தொகுதி மாறலாம் என நினைத்திருந்த வேளையில், அம்மன் அர்ச்சுணனின் கோரிக்கையை ஏற்று கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே எஸ்.பி.வேலுமணியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகியிருந்த வடவள்ளி சந்திரசேகர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளராக உள்ள அவர், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணிக்கு அழுத்தம் தந்து வருவது கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வானதி சீனிவாசனை கோவை வடக்கில் நிறுத்துவது என முடிவு செய்திருந்த நிலையில், தற்போது என்ன செய்வது என எஸ்.பி.வேலுமணிக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடக்கு சந்திரசேகருக்கு என்றால், வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு தர வேண்டியிருக்கும். மாநகர மாவட்டச் செயலாளராக உள்ள அம்மன் அர்ச்சுணனுக்கு வாய்ப்பு வழங்காமலும் இருக்க முடியாது. பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கியுள்ள சிங்காநல்லூர் தொகுதியில் பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், வானதி சீனிவாசனுக்கு வேறு தொகுதியையும் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், கோவை வடக்கு தொகுதியை எக்காரணம் கொண்டும் வானதி சீனிவாசனுக்கு ஒதுக்க கூடாது என்று அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதையும் மீறி சீட் வாங்கினால் தேர்தல் பணியாற்ற மாட்டோம் என்று பகிரங்கமாகவே மிரட்ட தொடங்கி உள்ளதால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் வேலுமணி திணறி வருகிறார்.